பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்67

30. மூலபல வதைப் படலம்
 

இராவணனுக்கும் அவன் குலத்தினருக்கும் மூல பலமாக இருந்த
படையை   இராமபிரான்   ஒருவனே  தனித்து  நின்று அழித்ததை
விளக்குகின்ற செய்தியைச் சொல்லும் படலம் இது.
 

மூலப்  படை  வதைப்  படலம்  என்று வெளிப்படையாகக்
குறிக்காமல், மூல பல வதைப் படலம் என்று குறித்ததை எண்ண
வேண்டும். வான்மீகரும் இப்பகுதிக்கு மூல பல யுத்தம் என்றே
பெயரிட்டுள்ளார்.   'பலம்'  என்ற சொல்லுக்குப் 'படை' என்ற
பொருளும்  உண்டு.  'தந்திரக்  கடலை  நீந்தித்  தன்  பெரும்
படையைச்  சார்ந்தான்   (7400)  என்ற  அடியில்  தன் பெரும்
பலத்தைச்  சேர்ந்தான்'  என்ற  பாடம் கொண்டு 'பலம்' என்ற
சொல்லுக்குப் 'படை' என்றே பொருள் கொண்டார் வை.மு.கோ.
 

மூலப்படையைத் 'தொல்படை' என்று வள்ளுவர் குறிக்கிறார்.
(குறள் 762) தொல்படையாகிய   மூலப்படை பற்றிப் பரிமேலழகர் 
தெளிவுற விளக்கியுள்ளார். ''மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, 
காட்டுப்படை,  துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் 
படையுள்ளும்   சிறப்புடையது மூலப்படை யாதலால், அம்மூலப் 
படையை அரசன்   அவல் பொரி   முதலியவற்றைக் கொடுத்துக் 
காப்பாற்றும் என்பதுகுறிப்பெச்சம்''   என்பது, கோ. வடிவேலு 
செட்டியாரவர்கள்   தெளிவுரை.   இப்படையின் சிறப்புப் பற்றி 
மேலும் தந்துள்ள விளக்கம் வருமாறு: ''மூலப் படை அரசனது 
முன்னோரைத் தொடங்கிவரும் சேனை. இது மூல பலம் எனப்படும். 
இராமாயணம், இராவணன்   இந்திரசித்து  மாண்ட பிறகு இராமர் 
முதலாயினோரை   அழித்தொழிக்குமாறு   மூலபலச்  சேனையை 
அனுப்பினான் என்று  கூறுவதாலும்  இஃது அறியப்படும். அம் 
மூலப்படைக்குச் சிறப்பாவது அரசனிடத்து அவன் முன்னோரைத் 
தொடங்கிவரும் அன்பும் தான் சிறிதாகிய விடத்தும் பயந்து நீங்காத
சௌரியம் (வீரம்) உடைமையுமாம்.
 

மூலம், பலம் என்ற இரண்டு சொற்களுக்கும் வேர் என்ற
பொருளும்   உண்டு   என்பது   இங்கே  நினைக்கத் தக்கது.
ஆதிதொட்டு வருதல், மூலம் ஆகி வேராகியிருத்தல், முதலான
பண்புகளை உடையது மூலப்படை என்பது புலப்படுகிறது. வேரே
அழிந்ததென்றால் பின் வாழ்வு இல்லை என்பது தெளிவு.
 

கம்பராமாயணப் படலங்களில் பெரியனவற்றுள் இப்படலமும்
ஒன்று. இதில் கூறப்படும் செய்திகளின் சுருக்கம் வருமாறு.