களும் தன்னெதிர் வந்து கண்டு தன் அடிகளிலே
வீழ்ந்து வணங்குதற்குக் காரணமான தெய்வத் தன்மையுடைய
இசையினையுடையதும் தேவேந்திரனால் பிரமசுந்தர
முனிவருக்குப் பரிசிலாக வழங்கப் பட்டதுமாகிய ‘கோடவதி’
என்னும் தெய்வயாழைப் பொறுமை மிக்க அப்பிரம
சுந்தர முனிவர் அருளினாலே பரிசிலாகப் பெற்று மகிழ்ந்தான்.
(14)
உதயணன் தெய்வயானையைக் கோடவதியின்
உதவியாற்
பெறுதல்
19. மைவரை மருங்கி னின்ற
மலையென விலங்கு கின்ற
தெய்வநல் லியானை கண்டு
சென்றுதன் வீணை பாடப்
பையெனக் களிறுங் கேட்டுப்
பணிந்தடி யிறைஞ்சி நின்று
கையது கொடுப்ப வேறிக்
காளையும் பள்ளி சேர்ந்தான்.
(இ - ள்.) ஒருநாள் உதயணகுமரன் அக்காட்டின்கண்
ஒரு மலையின் பக்கலிலே மற்றொரு மலை இயங்குமாறு
போலே இயங்குகின்ற ஓர் அழகிய தேவயானையைக் கண்டு
அதன்பாற் சென்று தனது கோடவதி என்னும் பேரியாழை
இயக்கிப்பாட, அத்தெய்வயானை தானும் அத்தெய்வயாழினது
இன்னிசை கேட்டு மெல்ல உதயணன் முன்பு வந்து முழங்காற்படியிட்டு
வணங்கி எழுந்து நின்று தன் பிடரிலேறுதற்பொருட்டு
உதயணனுக்குத் தனது கையினைப் படியாகக் கொடுப்ப அக்குறிப்புணர்ந்த
உதயணனும் அத்தெய்வயானையின் மேலேறி ஊர்ந்து
போய்த் தவப்பள்ளியை எய்தினன் என்க. (15)
தெய்வயானை உதயணன் கனவிற்றோன்றிக்
கூறுதல்
20. நன்றிருட் கனவி னாக
நயமறிந் தினிது ரைக்கு
பன்னிடும் பாகன் வந்து
பற்றியே யேறி னாலும்
இன்றைநாண் முதலா நீநா
னின்றியே முன்னுண் டாலும்
அன்றுன்பா னில்லே னென்றே
யக்கரி யுரைப்பக் கேட்டான்.
|