(இ - ள்.) மதனமஞ்சிகை பிரிவு முதலியவற்றைக்
கேட்ட வாசவதத்தை பெரிதும் வருந்தினாளாக;
அதுகண்ட நரவாகனன் உண்மையான தவத்தினையுடைய
சதானிக முனிவர் எதிர்காலத்தே தனக்கு நிகழ்வன
வினவ யென்று கூறியவற்றையெல்லாம் அத்தாய்க்குக்
கூறி அவள் துன்பத்தைப்போக்கினன். பின்னர் வானத்திலே
இயங்குமியல்புடையதாகத் தம்மிடத்தேயுள்ள தேர்மேலே
குற்றமற்ற அந்நரவாகனன் இனிதாக ஏறினன் என்க.
(33)
நரவாகனன் வித்தியாதரருலகஞ் செல்லுதல்
275. அன்பால் வான்வழி யாய்மணித் தேர்செலத்
தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்
இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென
மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன்.
(இ - ள்.) அம்மணித்தேர்தானும்
வானின் வழியாகப் பறந்து செல்லும்பொழுது மின்னுமணிகலன்
அணிந்த மார்பையுடைய அந்த நரவாகனன் அன்புடைமையாலே
வழிபாடு செய்து அத்தேரினை நீ வெள்ளிப்
பெருமலையின் தென்பாலமைந்த வித்தியாதர நாட்டின்கண்
சீதரலோகம் என்னும் இடத்தின்கண்ணதாகிய இனிய
பகுதிகளையுடைய பொய்கையின் கரையிடத்தே இறங்கித்
தங்குவாயாக! என்று வேண்டினன் என்க. (34)
நரவாகனனை அப்பொய்கைக் கரையில்
ஒரு வித்தியாதரன்
காண்டல்
276. நெடுங்க ரைமிசை நீர்மையி னின்றனன்
நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே
கடிக மழ்கண்ணிக் காளை யிருந்தனன்
அடிகண் டோர்மக னன்பிற் றொழுதனன்.
(இ - ள்.) மணங்கமழும் மலர்மாலையினையுடைய
நரவாகனன் கருதியபடியே அத்தெய்வத் தேர் அப்பொய்கைக்கரையிலிறங்கிய
பொழுது அவன் துன்பமின்றி அப்பொய்கையின்கண்
கண் வாய் முதலிய உறுப்புக்களை நீராற் றூய்மைசெய்து
இளைப்பாறி இருந்தானாக;
அப்பொழுது
ஒரு வித்தியாதரன் அங்குவந்து அன்போடு அவனடிகளிலே
வீழ்ந்து வணங்கினன் என்க. (35)
நரவாகனன் வித்தியாதரனை வினவுதலும்,
அவன் விடையும்
277. அண்ணல் கண்டுநீ யாருரை யென்றலும்
தண்ணென் வாய்மொழித் தானவன்
சொல்லுவான்
அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்
கண்ணோ ளிர்கொடிக் கந்தரு வப்புரம்.
|