பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்67


மூன்றாவது

மகத காண்டம்

உதயண குமரன் மீண்டும் வாசவதத்தையை நினைந்து வருந்துதல்

151. சயந்தியி னெல்லை விட்டுச்

சாலவு மகத நாட்டுக்

கியைந்துநன் கெழுந்து சென்றே

யிரவியி னுதய முற்றான்

நயந்தனன் றேவி காத

னன்மனத் தழுங்கிப் பின்னும்

வியந்துநல் லமைச்சர் தேற்ற

வெங்கடுங் கானம் புக்கான்.

(இ - ள்.) உதயணகுமரன் சயந்தி நகரத்தினது எல்லையை விட்டகன்று மகதநாடு செல்லற்கு மிகவு முடன்பட்டு நன்கு விரைந்தெழுந்து சென்று ஞாயிற்று மண்டிலம் தோற்றஞ் செய்தலைக் காணப் பெற்றான். போம்பொழுதும் தன் தேவியாகிய வாசவதத்தையின்பாற் பெருங்காதல் கொண்ட மன முடைமையாலே வருந்திப் பின்னும் அவன் காதற் பெருமை கண்டு நல்லமைச்சர்கள் வியந்து தேற்ற வெவ்விய காட்டினூடே சென்றனன் என்க. (1)

இதுவுமது

152. செத்தநற் றேவி தன்னைத்

திருப்பவு மீட்க லாமென்

றத்திசை முன்னி நல்ல

வருவழிப் பட்டுச் செல்ல

அத்தியும் பிணையு மேக

வாண்மயி லாடக் கண்டு

வத்தவன் கலுழ்ந்து ரைக்கு

மனனமை மனையை யோர்ந்தே.

(இ - ள்.) உதயணமன்னன் இறந்துபட்ட தன் தேவியை மீளவும் பெறலாமென்னும் அவாவினாலே அம்மகத நாடிருக்குந் திசையை நோக்கி நல்ல நடைவழியிலே செல்லுங்கால் எதிரே யானையும் மானும் செல்லவும், மயிற்சேவல் ஆடவுங் கண்டு தன் னெஞ்சமர்ந்த அத்தேவியை நினைந்து பெரிதும் இரங்கி வருந்தினான் என்க. (2)