பக்கம் எண் :

84உதயணகுமார காவியம் [ வத்தவ காண்டம்]


உதயணன் பத்திராபதி என்னும் பிடிக்கு மாடமும் உருவமும் எடுத்தல்

188. மதுரவண் டறாத மாலை

மகதவன் றங்கை யாய

பதுமைதன் பணைமு லைமேற்

பார்த்திபன் புணர்ந்து செல்ல

துதிக்கைமா வீழ்ந்த கானந்

தோன்றலு மாடம் பண்ணிப்

பதியினு மமைத்துப் பாங்கிற்

படிமமு மமைத்தா னன்றே.

(இ - ள்.) இனிய விசைபாடுகின்ற வண்டுகள் மொய்த்தலொழியாத மலர்மாலை யணிந்த மகதமன்னவன் றங்கையாகிய பதுமாப.தியின் பரிய முலைகளின்மேற்றங்கி, உதயணகுமரன் இன்ப நுகர்ந்து செல்லாநின்ற நாளிலே, பத்திராபதி என்னும் பிடியானை தனக்குதவி செய்து நோய்வாய்ப்பட்டு வீழ்ந்திறந்த காட்டின்கண் அச் செய்ந்நன்றியை நினைந்து புகழ் மிக்க அம் மன்னன் அதற்கு நினைவுச்சின்னமாக மாடம் எடுப்பித்து மேலும் கோசம்பி நகரத்தினும் அதற்கு மாடமெடுப்பித்து அழகாக உருவச்சிலையும் அமைத்தனன் என்க. (3)

உதயணன் கோடவதி யென்னும் யாழை மீண்டும் பெறல்

189. அருமறை யோதி நாம

மருஞ்சன னந்த ணன்றான்

திருவுறை யுஞ்சை நின்று

திகழ்கொடிக் கௌசாம் பிக்கு

வருநெறி வேயின் மீது

வத்தவன் வீணை கண்டு

பொருந்தவே கொண்டு வந்து

புரவலற் கீந்தா னன்றே.

(இ - ள்.) உணர்தற் கரிய மறைகளை ஓதியுணர்ந்து அருஞ்சனன் என்னும் தன் பெயர் பொறித்த புகழுடைய பார்ப்பனன் ஒருவன் செல்வம் மிக்குக் கிடக்கின்ற உஞ்சை நகரத்தினின்றும் விளங்குகின்ற கொடிகளையுடைய கோசம்பி நகரத்திற்கு வருகின்ற வழியிலே மூங்கிற்கிளையிலே சிக்குண்டு கிடந்த கோடவதியென்னும் அவ்வுதயணனுடைய தெய்வப் பேரியாழைக் கண்டெடுத்து ஏனைச் செல்வவரவோடு பொருந்தும்படி கொணர்ந்து உதயணவேந்தனுக்கு வழங்கினன் என்க. (4)