பக்கம் எண் :

98உதயணகுமார காவியம் [ வத்தவ காண்டம்]


(இ - ள்.) பின்னரும் அப்பிரச்சோதன மன்னன் அவையோரை நோக்கி “இந்த நல்லமைச்சன் யூகி எல்லையற்ற குணக்கடலாகத்திகழ்கின்றனன்; கல்லவி.யறிவுப் பெருக்கத்தானும், காண்டற்கினிய பேரழகுடைமையானும், சொல்லுதற்கரிய ஆட்சித்திறத்தினானும், சொல்லும் பொருளினது திட்பத்தானும் வல்லமையுடைய இவனுக்கு நிகர் இற்றைநாள் இவனேயன்றிப் பிறர் யாருமிலர்!” என்று பாராட்டிப் பேசினன் என்க. (31)

இதுவுமது

217. இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல்
இன்னவ ரின்றி யிலையர சென்றே
இன்னன நீடிய வியல்பிற் பிறவுரை
மன்னவ னாடி மகிழ்வித் திருந்தபின்.

(இ - ள்.) பின்னும் இத்தகைய பெருஞ்சிறப்புடைய இந்த யூகியை அமைச்சனாகப் பெற்றவராகிய உதயணமன்னருக்கும் தாமேற்கொண்டுள்ள அரசியற் சிறப்பினாலே அவ்வுதயண மன்னருக்கு நிகர் அவரேயன்றி வேறு அரசர் யாருமில்லை என்று கூறி இன்னோரன்ன தன்மையுடைய வேறு பல முகமன் மொழிகளையும் அம்மன்னவன் ஆராய்ந்தெடுத்து அவ்வவைக்கட் கூறி யூகியைப் பெரிதும் மகிழ்வித்திருந்தபின்னர் என்க. (32)

பிரச்சோதன மன்னன் யூகிக்குத் திருமணஞ் செய்வித்தல்

218. சாலங் காயன் சகோதர மானநன்
னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற்
பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக்
கோலங் காரன்ன கூரெயி றாப்பியும்.

(இ - ள்.) அவ்வந்தி வேந்தன், சாலங்காயன் என்னும் தன் அமைச்சன் தங்கையான கருங்குவளை மலரைக் கடிந்ததும் நெடிய வேல்போல்வதுமாகிய கண்ணையும் பாதிப் பிறையென்னத் தகுந்ததான அழகிய நெற்றியினையும் தளராத வெவ்விய முலையினையும் ஒப்பனை செய்யப்பட்ட முகில் போன்ற கூந்தலையும் கூர்த்த பற்களையும் உடையவளாகிய ‘யாப்பி’ என்பவளையும், என்க. (33)

இதுவுமது

219. பரதகன் றங்கை பான்மொழி வேற்கணி
திருநி லம்புகழ் திலதமா சேனையும்
பெருநில மறிய மணமிகப் பெற்றுடன்
அரிய யூகிக் கரசன் கொடுத்தனன்.