பக்கம் எண் :


206

     உவமையணி, சைவ அனுட்டானத்தில் சூரியனுக்கு அர்க்கியங்
கொடுத்தல் ஒரு கிரியை. பெண்ணின் முகம் சந்திரன் போன்றிருத்தலின்
சந்திரனுக்கு அர்க்கியம் கொடுப்பது போன்றிருந்தது. அர்க்கியம்
கொடுத்தல் - தண்ணீரை இரு கைகளாலும் முகந்து ஊற்றுதல். முருக்கு :
பொருளாகுபெயர்; முருக்கின் - இன்: உவம உருபு. செழும் புனல் :
பண்புத்தொகை.

     ஏகாரம் : ஈற்றசை மாரிக்காலத்துச் சந்திரன் மேகங்கள் நடுவே
ஒளிவீசுவதுபோல் பெண்ணின் முகமும் மேகம் போன்ற
கருங்கூந்தலினுள்ளே ஒளிவீசியது.
                                                   (298)

403. ஒருத்தி கொங்கை இரண்டினில் ஒன்றன்மேல்
துருத்தி நீர்இரு தோகையர் வீசினார்
பெருத்த மந்தர வெற்பைப் பிணித்ததோர்
பருத்த வாசுகித் தாம்புஇழுப் பார்என.

     (இ - ள்.) பெருத்த மந்தர வெற்பைப் பிணித்தது ஓர் பருத்த
வாசுகித் தாம்பு - பெரிய மந்தரமலையைக் கட்டிய ஒரு பெரிய வாசுகிப்
பாம்பாகிய கயிற்றை, இழுப்பார் என - இழுப்பவர்களைப்போல, ஒருத்தி
கொங்கை இரண்டினில் - ஒரு பெண்ணின் இரண்டு தனங்களில்,
ஒன்றன்மேல் - ஒரு தனத்தின்மேல், இரு தோகையர் - இரண்டு
மயில்போன்ற சாயலையுடைய பெண்கள், துருத்தி நீர் வீசினார் -
துருத்தியிலுள்ள தண்ணீரை வீசினார்கள்.

     மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பைக் கயிறாகக்
கொண்டு இருபக்கமும் இழுத்துக் கடைந்தார்கள். அதுபோல மந்தர மலை
போன்ற தனத்தில் இரு பெண்கள் துருத்தியை இழுத்து நீரைப்
பாய்ச்சினார்கள்: உவமையணி.

     தோகையர் : இருமடியாகுபெயர். மந்தர வெற்பு, வாசுகித் தாம்பு :
இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள், என : உவம உருபு.
                                                   (299)

 
404. நவ்வி நோக்கி நளிர்மு கத்தேஒரு
செவ்வி யாள்சிந் திடும்சிவி றிப்புனல்
அவ்வி யத்துடன் ஆழிவெண் திங்களைக்
கவ்வி முன்நிமிர் கட்செலி ஒத்ததே.

     (இ - ள்.) நவ்வி நோக்கி நளிர் முகத்து - மான்போலும்
கண்களையுடைய ஒரு பெண்ணின் பெருமை பொருந்திய குளிர்ந்த
முகத்தில், ஒரு செவ்வியாள் - ஓர் அழகுடைய பெண், புனல் சிந்திடும்
சிவிறி - நீரைத் தெளிக்கும் கருவியானது, ஆழி வெண் திங்களை -
கடலில் உதிக்கும் வெண்மையான சந்திரனை, அவ்வியத்துடன் -
பொறாமையோடு, கவ்வி முன் நிமிர் கண் செவி ஒத்தது -
கவ்விக்கொண்டு உலகத்தார் முன்பு தோன்றுகிற நிமிர்ந்த இராகு என்னும்
பாம்பை ஒத்திருந்தது.

     கட்செவி - பாம்புக்குக் கண்ணினுள்ளேயே செவி இந்திரியம்
அமைந்திருத்தலின் பாம்புக்குக் 'கட்செவி' என்பது காரணப்பெயர்.
முகமானது சந்திரன் போலவும், நீர் வீசும் குழலானது பாம்பு போலவும்
இருந்தது. உவமையணி. பண்புவமை.
                                                   (300)