பக்கம் எண் :


229

அன்றி - பொய் கூறிய உனது வாய் புழுத்தல் அன்றி, பொய்யா மெய்
வந்த என் வாய் மனம் வேவல என்று சொன்னான் - பொய் கூறாது
உண்மை கூறிய என் வாயும் உண்மையே நினைத்த என் மனமும்
வெந்துபோகுமா? போகாது என்று சொன்னான்.

     'பொய் கூறிய வாய் தானே புழுவாகும், வேகும்; என் வாய் பொய்
கூறவில்லையே! உன் வாய்தான் பொய் கூறியது; உன்வாய்தான்
புழுவாகத்தக்கது, வேகத்தக்கது' என்று கோசிகன் மறுப்புரை கூறினான்
என்க.
                                                    (37)

         வசிட்டனுக்குச் சினமிகுதல்   
449. புனங்கொண் டசெந்தீப் புயறாவி எழுந்த தேபோல்
மனங்கொண் டடங்காப் பெருவன்மை வசிட்டற் கெய்திக்
கனங்கொண் டகற்ப முடிவின்க ணுருத்தி ரன்போற்
சினங்கொண் டெழுந்தான் விழித்தீத்திசை தோறும் சிந்த.

     (இ - ள்.) வசிட்டற்கு - வசிட்டனுக்கு, புனங் கொண்ட செந்தீ -
காட்டில் பற்றிய செந்நிறத் தீயானது, புயல் தாவி எழுந்ததே போல் -
மேகமண்டலத்தளவு தாவி உயர்ந்து சென்றதுபோல், மனம் கொண்டு
அடங்காப் பெரு வன்மை எய்தி - மனமுழுதிலும் பற்றிப் பிடித்துக்
கொண்டு அடங்காத பெரிய வலிமை அடைந்து, கனம் கொண்ட
கற்பமுடிவின்கண் - கனமான பிரம கற்பகால முடிவில் தேன்றுகின்ற,
உருத்திரன் போல் - காலாக்கினி உருத்திரன்போல, விழித்தீத் திசை
தோறுஞ் சிந்த - கண்ணிலுள்ள நெருப்பு நான்கு திசையும் பரவ, சினங்
கொண்டு எழுந்தான் - கோபித்து எழுந்தான்.

     புயல் + தாவி - புயறாவி; உவமையணி.

     கோசிகன் கூறிய சொற்கள் வசிட்டனுக்குச் சினத்தை மூட்டின.
யுகமுடிவில் வரும் உருத்திரனைப்போலக் கண் சிவந்து சினந்து எழுந்தான்
என்க.
                                                    (38)

 
       விசுவாமித்திரனுக்குச் சினமிகுதல்   
450. தாங்கிற் றிலன்கௌ சிகன்றானும்அவ் வாறு சீற்றம்
ஓங்கக் கதித்துற் றனன்உற்றஅப் போதி ரண்டு
பாங்கிற் படுசெந் தழல்பம்பியுற் றங்கும் இங்கும்
நீங்கிற் றிலைநீள் கொழுந்தோடி நிமிர்ந்த தன்றே.

     (இ - ள்.) கௌசிகன் தானும் தாங்கிற்றிலன் - விசுவாமித்திரனும்
பொறாதவனாய், அவ்வாறு சீற்றம் ஓங்க - அவ்விதமாகவே வசிட்டன்
கொண்ட வெகுளியளவு கோபம் பொங்கி எழ, கதித்து உற்றனன்
உக்கிரங்கொண்டு நின்றான், உற்ற அப்போது - கோபமுற்ற அப்பொழுது,
இரண்டு பாங்கில் படு செந்தழல் - இரண்டு பக்கங்களிலும் உண்டாகிய
சிவந்த சினத் தீயானது, பம்பி உற்று - மண்டி நெருங்கி. அங்கும் இங்கும்
நீங்கிற்றிலை - எப்பக்கங்களிலும் நீங்காதாகி, நீள் கொழுந்து ஓடி
நிமிர்ந்தது - நீண்ட சுவாலையாக ஓடி உயர்ந்தது.