பக்கம் எண் :


255

     (இ - ள்.) மன்னர் மன்ன - அரசர்களுக்கெல்லாம் பேரரசனே!,
என்ன பாவம் - என்ன பாவத்தால் இக் கேடு வந்ததோ!. இதற்கு முன்
கண்டிலேம் - இதற்கு முன்னால் இத்தகைய கேடு கண்டதேயில்லை,
வனத்து விலங்கினால் - காட்டு மிருகங்களால், செந்நெல் - செந்நெல்லும்,
கன்னல் - கரும்பும், தினைப்புனம் - தினைப்புனமும், தேம்பொழில் -
இனிய சோலைகளும், இன்ன எண்ணில இன்று இற்றன என்றார் - இவை
போன்றவையும் கணக்கற்றவை இன்று அழிந்தன என்று சொன்னார்கள்.

     செந்நெல் கன்னல் தினைப்புனம் தேம் பொழில்: எண்ணும்மை
தொக்கது. இன்று இற்றன இதற்குமுன் கண்டிலேம் என்ன பாவம் எனக்
கூட்டுக. எக்காலத்தும் இது போன்ற கேடு நிகழ்ந்திலது என்பார்
'இதற்குமுன் கண்டிலேம்' என்றார்.
                                                    (54)

 
513.

கலையும் மானும் கடமையும் ஏனமும்
மலியும் தண்பயிர் யாவையும் மாய்த்தன
புலியும் பல்லமும் சிங்கமும் புக்குயிர்
நலியும் ஓட்ட நடந்தவர் தம்மையே.

     (இ - ள்.) கலையும் - கலைமான்களும்., மானும் -
புள்ளிமான்களும், கடமையும் - காட்டுப்பசுக்களும், ஏனமும் - பன்றிகளும்,
மலியும் தண் பயிர் யாவையும் - நிறைந்த குளிர்ச்சி பொருந்திய பயிர்கள்
யாவற்றையும், மாய்த்தன - அழித்தன, புலியும் - புலியும்,
பல்லமும்-கரடிகளும், சிங்கமும் - சிங்கமும், ஒட்ட நடந்தவர் தம்மை -
பயிரை அழிக்கும் விலங்குகளை ஓட்டுதற்காகச் சென்றவர்களை, புக்கு -
சாடி, உயிர் நலியும் - உயிரைப் போக்கிவிடும்.

     யாவையும்: முற்றும்மை; கலையும் மானும் கடமையும் ஏனமும்
புலியும் பல்லமும் சிங்கமும்: எண்ணும்மைகள். கலை முதலிய விலங்குகள்
பயிர் முதலியவற்றை அழிக்க அவற்றைக் கடிந்தோட்டவந்த
மக்களையெல்லாம் புலி, கரடி, சிங்கங்கள் அழித்தன என்பது. ஒட்ட
நடந்தவர் தம்மையே புலியும்...........சிங்கமும் நலியும் எனக் கூட்டுக.
                                                    (55)

514. நீரை மாய்த்தன வாரண நீள்பயிர்த்
தூரை மாய்த்தன மான்மரை சூகரம்
வேரை மாய்த்தன மென்மயில் பைங்கிளி
சேர மாய்த்தன செந்நெற் கதிரையே.

     (இ - ள்.) வாரணம் - யானைகள், நீரை மாய்த்தன - நீரையுடைய
குளங்களை அழித்தன, மான் மரை - மான்களும் மரைகளும், நீள்பயிர்த்
தூரை மாய்த்தன - உயர்ந்து வளர்ந்த பயிர்களின் அடிப்பாகத்தை
அழித்தன, சூகரம் வேரை மாய்த்தன - பன்றிகள் அவற்றின் வேரை
அழித்தன, மென் மயில் பைங்கிளி - மெல்லிய மயில்களும் பசுமையான
கிளிகளும், செந்நெல் கதிரைச் சேர மாய்த்தன - செந்நெற்பயிர்க்
கதிர்களை ஒருசேர அழித்தன.