பக்கம் எண் :


292

வீசும் அலைகளையுடைய கடல் நீரையும், வடவைக் கனல் - வடவை
நெருப்பையும், சேர எரித்திடும் - ஒருசேர எரித்து அழித்துவிடும்.
(இவ்வாறு சினத்துடன் நின்றது அப் பன்றி.)

     வரை எட்டிலும் பாயும்; மேகங்களை மண்ணில் விழும்படி
மோதும்; வாய் நுரை எங்குஞ் சிதறுவிக்கும்; வடவைத் தீயையும் எரிக்கும்
தோற்றத்தோடு நின்றது என்பது கருத்து.
                                                    (66)

 
587. ஆடன் மதத்திரு நாலுதி சைக்களி றானவை யத்தனையும்
கோட தனிற்கர மீதுற வைத்துடல் கூசிவெ ருக்கொளவே
சேடன் முதற்படு வாளர வத்தலை சேரந டுக்குறவே
ஓடும் விசைத்தெழு நீள்புவி யைப்புன லூறநெ ரித்துழுமே.

     (இ - ள்.) ஆடல் மதத்து இருநாலு திசைக் களிறானவை
அத்தனையும் - வலிமையும் மதமும் உடைய எட்டுத் திக்கு யானைகளும்,
கோடு அதனில் கரம் மீதுற வைத்து - தம் கொம்புகளின்மேல் தம்
துதிக்கைகளை மடக்கிவைத்து, உடல் கூசி வெரு கொளவே - உடல்
கூசி அஞ்சும்படியும், சேடன் முதல் படுவாள் அரவத் தலை சேர
நடுக்குற - ஆதிசேடன் முதலாக எட்டுத்திசைகளிலும் உள்ள பாம்புகளின்
தலைகள் நடுங்கும்படியும், ஓடும் - அப் பன்றியானது விரைந்து ஓடும்,
விசைத்து எழும் - வேகங்கொண்டு எழுந்து செல்லும், நீள் புவியைப்
புனலூற நெரித்து உழும் - நீண்ட இந்தப் பூமியை நீர் பெருக்கெடுத்து
ஓடும்படி நெரித்துத் தன் கொம்புகளால் உழுதலைச் செய்யும்.

     இவ்வாறு பல கொடுஞ்செயல் புரிந்து நின்றது அப் பன்றி; ஓடும்
போது திசையானைகள் நடுங்கின; ஆதிசேடன் தலைகளும் நடுங்கின;
கோட்டாற் குத்தும்போது பூமியில் நீர் ஊறிற்று என்பது.
                                                    (67)

 
588. ஊறுப டுத்திடு பாகர்செ லுத்திய ஓடைம தக்கரியை
நீறுப டுத்திடும் வீரர்ந டத்திய நீளிரதத் தினையே
கூறுப டுத்திடும் வாதுவர் எற்றிய கோலவ யப்பரியைச்
சேறுப டுத்திடு மாமக ரத்திரள் சேரும்அ ளக்கரையே.

     (இ - ள்.) பாகர் செலுத்திய ஓடை மதக்கரியை - பாகர்களால்
செலுத்தப்பட்ட முகபடாத்தை அணிந்த மதயானையை, ஊறுபடுத்திடும்
- கொன்றுவிடும், வீரர் நடத்திய நீள் இரதத்தினை நீறுபடுத்திடும் -
வீரர்கள் செலுத்திய பெரிய தேர்களைத் தூசியாக்கிவிடும், வாதுவர்
ஏற்றிய கோல வயப் பரியை கூறுபடுத்திடும் - குதிரை வீரர்கள்
செலுத்திய அழகிய வெற்றிகொண்ட குதிரைகளைப் பிளந்துவிடும்,
மா மகரத் திரள் சேரும் அளக்கரையே சேறுபடுத்திடும் - பெரிய
சுறாமீன் கூட்டங்கள் நிறைந்த கடலைச் சேறாக்கிவிடும் (அப்பன்றி.)

     யானையையும் கொல்லும்: தேரினைத் தூசியாக்கும்; குதிரையைப்
பிளக்கும்; கடலைச் சேறாக்கும், இக் கொடிய செயல் புரிவது அப்பன்றி.
                                                    (68)