பக்கம் எண் :


38

எனவும் அலைகள் அவை தங்கும் தாமரைமலரை யசைத்துத்
துயில்விக்கும் எனவும் கொள்க.
                                                    (51)

 
  பலவின் தேன் குளங்களில் தாமரைமலரில்
   
      பாய்தல்
66.

பள்ள மேற்பன சக்கனி ஊறலவ்
வெள்ள மேற்கம லத்தலர் மேல்விழ
உள்ள மேற்கமு னுண்ட அவாவினால்
வள்ள மேற்பன போல்வன வாவியே.

     (இ - ள்.) பள்ளம் மேல் பனசக்கனி ஊறல் - குளமாகிய
பள்ளத்தின்மேலுள்ள கரையில் நின்ற பலாமரத்தின் பழகளிலிருந்து
வழிகின்ற தேன், அ வெள்ளம் மேல் கமலத்து அலர் மேல் விழ - அத்
தண்ணீரின்மேல் விரிந்த தாமரைப்பூக்கள் மேல்விழுங் காட்சியானது,
உள்ளம் ஏற்க முன் உண்ட அவாவினால் - மனமார முன்னர்ப் பலவின்
தேன் பருகிய ஆசையினால், வாவி - அக்குளங்கள், வள்ளம் ஏற்பன
போல்வன - கிண்ணங்களை ஏந்தி நிற்பன போலத் தோன்றின.

     தாமரைப்பூக்கள் இயல்பாக வெள்ளத்தின் அளவு உயர்ந்து விரிந்து
மேல்நோக்கி நிற்பதைத் தேன் ஏந்த நிற்கும் வள்ளங்கள் எனக் கற்பித்துக்
கூறலின் தற்குறிப்பேற்ற அணி.
                                                    (52)


 
  குரங்கு தின்றுவிட்ட பாதிப்பலாப்பழம்
   
   பருதிபோல்தோன்றல்
 
67. பூகத் தின்செழும் பாளையைப் புன்கவி
நாகத் தின்படம் என்று நடுங்கியே
பாகத் தில்தின்று விட்ட பலாக்கனி
மேகத் திற்புரை வெங்கதிர் ஒக்குமே.

     (இ - ள்.) புன் கவி - அற்ப அறிவுள்ள குரங்கு, பூகத்தின் செழும்
பாளையை நாகத்தின் படம் என்று நடுங்கி - கமுகமரத்திலுள்ள
செழிப்பான பாளையை நாகப்பாம்பின் படம் என்று எண்ணி நடுங்கி,
பாகத்தில் தின்று விட்ட பலாக் கனி - ஒரு பாதி தின் அளவில்
போட்டுவிட்டுச் சென்ற மறுபாதிப் பலாப்பழம், மேகத்தில் புரை வெங்
கதிர் ஒக்கும் - மேகத்திலே பொருந்தியுள்ள சூரியன் வடிவினை ஒத்துத்
தோன்றும்.

     பலாப்பழம் பசுமையான புறத்தோட்டுடனும் தின்ற பாதி பொன்னிறச்
சுளைகளுடன் வட்ட வடிவுடனும் இருப்பதால் அது மேகத்தில் பொருந்திய
சூரியனைப்போலத் தோன்றிற்று. கமுகின் பாளையை நாகா டமெனக்
குரங்கு மயங்கலின் மயக்க அணி. பாதிப் பலாக்கனிக்கு மேகத்தில்
மறைந்து தோன்றும் சூரியனை உவமை கூறுதலின் உவமையணி.
இவ்விரண்டு அணிகளும் கலந்த கலவை அணி. வெங்கதிர் -
வெம்மை+கதிர். இயைபின்மை நீக்கிய அடைமொழி.
                                                    (53)