பக்கம் எண் :


46

கோதையரனைவரும் அந்நகரிற் கூடுவது மேன்மேலும் உயர்வன என்க.
                                                     (8)

  பொது மகளிரின் பொழுது போக்கு
82. பொற்ப ராககர்ப் பூர பராகச்செம்
பற்ப ராக பயோதர வேசையர்
விற்ப ராகம் இராவிடி யன்முதற்
கற்ப ராகம நாடகங் கானமே.

     (இ - ள்.) பொன் பராக கர்ப்பூர பராக செம் பற்பராக பயோதர
வேசையர் - பொன்னிறமான நறுமணப் பொடிகளும் பச்சைக் கர்ப்பூரத்
தூள்களும் சிவந்த பதுமராக மணிமாலைகளும் கொண்டுள்ள
கொங்கைகளையுடைய பொதுமகளிர், இரா ஆகம் விற்பர் - இரவில்
தங்கள் உடலினை இச்சித்த நாயகர்க்கு விற்பார்கள், விடியல் முதல்
ஆகம நாடக கானம் கற்பர் - விடிந்தது முதல் பகலில் நூல்களையும்
நடனத்தையும் இசையையும் கற்பார்கள்.

     பொதுமகளிரும் முத்தமிழ் அறிவு பெற்றிருந்தனர் என்பதாம்,
ஆகமம் என்பது பொதுவாக நூல்களைக் குறிக்கும். ஆயினும் இங்குச்
சிறப்பாகக் கொக்கோக நூலினையே யுணர்த்தியதாகக் கொள்க :
பராகம் - தூள், தூசி. பயோதரம் கொங்கை. ஆகம் விற்பர் என மாற்றுக.
                                                     (9)

 
  கொடிகள் நகர்வளங் காண மக்களை
   
      அழைத்தல்
83. எம்மி னண்ணி இருந்தன யாவையும்
வம்மி னென்ன அழைப்பது மானவே
விம்மி நின்ற வியன்கொடி எங்கணும்
தம்மின் நின்று நுடங்கித் தயங்குமே.

     (இ - ள்.) எங்கணும் விம்மி நின்ற வியன் கொடி - அயோத்தி
நகரில் எல்லா இடங்களிலும் பெருமிதமாய் அசைந்துகொண்டு நின்ற
அகன்ற கொடிகள், தம்மில் நின்று - தமது நகர எல்லையில் நின்று,
யாவையும் எம் இல் நண்ணி இருந்தன - உலகத்தில் உள்ள எல்லாப்
பொருள்களும் எம்மிடத்தில் பொருந்தியிருக்கின்றன. வம்மின் என்று -
அவற்றைக் காண வாருங்கள் என்று, அழைப்பது மான - கைகாட்டி
அழைப்பது போல, நுடங்கித் தயங்கும் - அசைந்து விளங்கும்.

     காண என்பது சொல்லெச்சம். எம்மில் + நண்ணி - எம்மினண்ணி :
"லள மெலி மேவின் னணவும்," "னலமுன் றனவும் ஆகுந் தநக்கள்" என்ற
விதிகளின்படி ஆயின, ஏகாரம் : அசை. மான : உவமவுருபு, கொடிகள்
தலையசைத்து வரவழைப்பனபோல அசைந்தன. தயங்குமே - ஏகாரம் :
ஈற்றசை. துகிற் கொடிகள் அசைந்தாடுவதை வாருங்கள் என்று கைகாட்டி
யழைப்பன போலத் தோன்றும் என்று கற்பித்தலால் இது
தற்குறிப்பேற்றவணி.
                                                     (10)