பக்கம் எண் :


461

     (இ - ள்.) அன்ன காலை அமைச்சனை நோக்கியே - அவ்வேளை
மன்னன் அமைச்சனைப் பார்த்து. என்னை நீ விற்று இவற்குப் பொன் ஈக
எனா - என்னை நீ விற்று இவனுக்குப் பொன் கொடுப்பாயாக என்று,
சொன்ன போதில் துணுக்கென ஏங்கி - சொன்னநேரத்தில் துணுக்கென்று
வருந்தி, எம் மன்ன கேள் என மந்திரி கூறுவான் - எம் மன்னனே
கேட்பாயாக என மந்திரி கூறத் தொடங்கினான்.

     மந்திரி சத்தியகீர்த்தியை நோக்கி 'என்னை விற்று இம் மறையவற்குக்
கூலி கொடுத்து விடுப்பாய்' என்று மன்னன் கூறினன், மந்திரி வருந்தி
அதனை மறுத்துக் கூறுகின்றான்.
                                                    (45)

 
952. அன்னை யாயெம தாண்டகை யாகிய
நின்னை யான்விலை கூறுத னீதியோ
என்னை நீவிற் றிவற்குச் செலத்தகும்
பொன்னை நல்கென வீழ்ந்தடி பூண்டனன்.

       (இ - ள்.) அன்னையாய் எமது ஆண் தகையாகிய நின்னை -
எனக்குத் தாயாகியும் மன்னனாகியும் இருந்த உன்னை, யான் விலை
கூறுதல் நீதியோ - யான் விலை கூறி விற்றல் முறையாகுமோ?, என்னை
நீ விற்று இவற்குச் செலத் தகும் பொன்னை நல்கு என - என்னை நீ
விற்று இவனுக்குத் தரவேண்டிய பொன்னைக் கொடு என்று, வீழ்ந்தடி
பூண்டனன் - வீழ்ந்து அடிகளில் வணங்கினான்.

     அமைச்சன் அரசனை நோக்கி 'நான் உன்னை விற்பது நெறியல்ல;
நீ எனக்குத் தாய் போலவும், மன்னனாகவும் இருந்து என்னை
யாதரித்தவன். ஆதலால் என்னை விற்றுக் கொடு' என்று இயம்பினன்.
                                                    (46)

 
953. மண்ணில் வீழ்ந்த அமைச்சனை மார்பணைத்
தொண்ணி லாவத னத்தொளி மாழ்கவே
கண்ணி னிற்புன லாட்டிக் கௌசிகன்
எண்ணும் நீர்மைக்கி தேற்கும தோவென்றான்.

     (இ - ள்.) மண்ணில் வீழ்ந்த அமைச்சனை - மண்ணில் வீழ்ந்து
வருந்தும் அமைச்சனை, மார்பு அனைத்து - மன்னன் மார்போடு
அணைத்துக்கொண்டு, ஒள் நிலா வதனத்து ஒளி மாழ்கவே - ஒளிமிக்க
நிலாப்போன்ற முகத்தில் ஒளி நீங்கும்படி, கண்ணினிற் புனல் ஆட்டி -
கண்ணின் நீரால் முழுகச்செய்து, கௌசிகன் எண்ணும் நீர்மைக்கு இது
ஏற்குமதோ என்றான் - கௌசிகன் நினைக்கின்ற தன்மைக்கு இது
பொருந்துமோ? என்றான்.

     மண்ணில் விழுந்துகிடந்த மந்திரியை எடுத்து மார்போடு
அணைத்துப் புலம்பினான் மன்னன். 'முனிவன் எண்ணியிருக்கும்
எண்ணத்திற்கு உன்னை விற்பது பொருத்தமாகுமோ? பொருந்தாது'
என்றான். 'நானே அம் முனிவனுக்குக் கொடுக்கவேண்டிய கடமை
யுள்ளவன்; அம் முனிவன் கருத்தும் அதுவே' என்றான்.
                                                    (47)