பக்கம் எண் :


திருநாட்டுப்படலம் 13


விச்சை மந்திர வலியினால் வீங்குநீர் மழையை
வச்சி ரக்கணை யாக்கிமெய் வளமெனக் கருளும்
பொச்ச மில்மறை வேள்வியும் புனிதன்ஏந் தழலும்
எச்ச மாகமற் றெவையும்ஈண் டிறுகென இயம்பி     7

     மந்திரவித்தையின் வன்மையால் பெருமழைத் தாரையை
வயிரக்கணையாக்கி, வேள்வித்தீயையும், சிவபிரான் திருக்கரத்துத் தீயையும்
தவிரப் பிற நெருப் பெவற்றையும் அழிக்க எனக்கூறிவிடுத்து, 

     மெய்வளமாவது உயிருடம்புகளை ஒன்று படுத்தி உலகைச் சித்திரிக்கும்
தன்மை. பொச்சம் இல் மறை-பயனால் வழுப்படா மறை; வேள்விக்கு
ஏற்றினும், அமையும், ஈண்டு-விரைய, வேள்வி மழைக்குக் காரணம் ஆதலின்,
எனக்கருளும் என்க.

காட்ட கங்களுங் கழைநரல் கதிர்மணிச் சிமயக்
கோட்ட கங்களும் குளிர்புனற் கழனிசூழ் குலவு
நாட்ட கங்களும் பரல்முரம் படுத்தெரி நடஞ்செய்
மோட்ட கங்களும் முழுவதுங் குளிர்கொளச் சொரிந்து.  8

     முல்லையும், குறிஞ்சியும், மருதமும், நெருப்பின் திருக்கூத்து நிகழ்கின்ற
பாலையும் ஆகிய எங்கணும் குளிர்ச்சி பெறச்சொரிந்து.

     கழை நரல்-மூங்கில் ஒலிக்கின்ற, மணி-முத்து. சிமயக்கோடு-மலைச்
சிகரம். பரல்-பருக்கைக் கற்கள். முரம்பு-மேட்டு நிலம்.

இற்றொ ழிந்தன ஒழியமற் றெஞ்சிய எரிபோய்க்
கற்ற வேதியர் வேள்வியஞ் சாலையுட் கரப்ப
உற்ற வாகண்டு தன்சினக் கனலையும் ஒருவி
வெற்றி மாமுர செனமறைப் பேரொலி விளக்கி.       9

     கெட்டொழிந்த நெருப்பொழிய மிக்கிருந்தவை வேதியர்
செய்வேள்வியில் அடைக்கலம்புகக் கண்டு கோபமாகிய கனலையும் நீக்கி
வெற்றியின் முழக்கென வேதபாராயண ஒலியால் விளக்கி,

தனது கீர்த்தியுந் திறற்பிர தாபமும் தரைமேல்
அனல்செய் கோபமும் முல்லையு மெனஎங்கும் அமைத்துப்
புனித மாம்அவை தன்னையும் பொதிந்துகொண் டென்னப்
பனிவி சும்பினிற் சிவந்துவெண் ணிறம்படைத் தன்றே.   10

     மேகம், கொடையால் வருபுகழும், படைத்திறத்தால் வரு பிரதாபமும்
பெற்ற நிலையை முல்லை மலரானும், இந்திர கோபப் பூச்சியானும் தரைமேல்
யாண்டும் பரப்பி, அவ்வளவின் அமையாது தூய அப்புகழ்ப் பிரதாபங்கள்
அவற்றிற்கு முதலாகிய தம்மையும் அகப்படுத்தாற்போல ஆகாயத்தில்
வெண்ணிறமும், செந்நிறமும், படைத்தன்று,

     கீர்த்தி- வெண்ணிறம், பிரதாபம், செந்நிறம், கவி மதம். முன்னது
ஈரத்தானும், பின்னது வீரத்தானும் அடைவன.