பக்கம் எண் :


194காஞ்சிப் புராணம்


     இங்ஙனம் ஒருவர் ஒருவரைச் சிருட்டித்தலால் செருக்கடையும்
இவர்களை முதற்பொருளென்று நினைந்து முற்பிறப்பிற் செய்த தீவினையால்
மயங்குவோர் மயங்குவோராக, மேலைத்தவத்தால் மெய்ந்நூல்களை உணர்ந்து
திருவருளைத் தலைப்படும் திரிபிலராய செவ்வியோர் யாவரும் விடத்தைக்
கண்டத் தடக்கித் தேவரைக் காத்து, முக்குணங்களையும் கடந்து உயர்ந்த
தனிமுழுமுதற்பொருளே யாவர்க்கும் மூலகாரணனெனத் தெளிவார் ஆவர்.

     ஓரோர் செயலையும் இறைவன் அருளாற் பெற்று அதனை மறந்து
செருக்கி இழிநிலை யடைந்த செய்தியைப் பல வரலாறுகளிற் காணலாம்.
வல்வினையால் எனவே தவத்தால் என அதற்குரிய காரணம் வருவிக்கப்
பட்டது. ‘உயர்’ என்னும் அடை குணங்களுள் ஏற்றிழிவு உடையவற்றிற்குப்
பொருந்தாமையான், கடந்து உயர்ந்த எனக் கொள்ளப்பட்டது. ‘நிர்க்குணன்’
குணாதீதன் என்னும் திருநாமங்கள் இம்மூன்றனையும் கடந்தமையை
விளக்கும். ‘எண்குணன்’ என்பது அருட்குணங்கள் எட்டனையும் உடையோன்
ஆகவே முரணின்மை அறிக. மும்மை மூன்று. ‘தெரிமாண் தமிழ் மும்மைத்
தென்னம் பொருப்பன்’ என்புழிப் போல. ‘பிரமன் முதலான முத்தேவர்
அவாந்தர காரணர்’ சிவபிரான் ஒருவனே காரணர்களைப் படைத்துக்
காத்து அழிக்கும் மூல காரணன் எனத்தெளிதல் வேண்டும்.

சிவாத்தானப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 632

மணிகண்டேசப் படலம்

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     ஞிமிறுகால் உழக்க முகைஉடைந் தலர்ந்து நெட்டிதழ்
வாய்தொறும் நறவம், உமிழ்மலர்த் தடஞ்சூழ் திருச்சிவாத்
தானத்துண்மையைத் தெரிந்தவா றுரைத்தாம், அமிழ்தமும் கைப்பக்
குழாங்குழா மாகி அறிஞர்தாம் கழகங்கள் தோறும், தமிழ்தெரி
காஞ்சி வரைப்பினில் மணிகண்டேச்சரத் தலத்தியல் புரைப்பாம். 

     வண்டு காலால் மிதிக்க அரும்பு முறுக்குடைந்தலர்ந்து நீண்ட
இதழ்களினிடந்தொறும் தேனைச் சொரிகின்ற மலர்கள் நிரம்பிய தடங்கள்
சூழ்ந்த செல்வச் சிவாத்தானத்தினது தோற்றத்தை அறிந்த அளவிலே
கூறினோம். நாவால் நுகரப்படும் தேவருணவாகிய அமிழ்தமும் கசக்கும்படி
அறிஞர்கள் கூட்டம் கூட்டமாய்க்கழகங்கள் தோறும் இருந்து தமிழை
ஆராய்கின்ற காஞ்சி எல்லையில் ‘மணிகண்டேசம்’ என்னும் திருத்தலத்தின்
வரலாற்றினைக் கூறுவாம்.