பக்கம் எண் :


299


தான்தோன் றீச்சரப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

கிளைத்தெழுங் குழவித் திங்கட் கீற்றிளங் கொழுந்து மோலி
வளைத்தழும் பாளன் வைகுஞ் சுரகர வளாகஞ் சொற்றாம்
திளைத்தவர் கருவில் எய்தாச் சுரகர தீர்த்தத் தென்பால்
இளைத்தவர்க் கிரங்குந் தான்தோன் றீச்சரத் தியல்பு சொல்வாம்.  1

     இளம்பிறையைத் தரித்த சடை முடியையும் காமாட்சியம்மையரின்
வளையல் வடுவினையும் கொண்ட பெருமான் வைகும் சுரகரேசத்தின்
உண்மையைக் கூறினாம். படிந்தவர்க்குப் பிறவி நோயைப் போக்கும் சுரகர
தீர்த்தத்திற்குத் தெற்கில் உள்ளம் மெலிந்தவர்க்கு இரங்கி அருள் செய்யும்
தானே தோன்றிய ஈச்சரத்தினது தன்மையைக் கூறுவாம்.

முழுமலத் தொடக்கு நீங்கி ஆருயிர் முத்தி சேர்வான்
மழுவலான் தானே தோன்றும் வாய்மையால் தான்தோன் றீசக்
கெழுதகு பெயரின் ஓங்கும் கிளக்கும்அவ் விலிங்கந் தன்னைத்
தொழுதொரு சிறுவன் தீம்பால் பெற்றவா சொல்லக்கேண்மின்   2

     ஆணவ மலப்பிணிப்பு நீங்கி அரிய உயிர்கள் முத்தியைப் பெறற்
பொருட்டு மழுவுடையோன் தானே வெளிப்பட்டருளியமையின் தான்
தோன்றீசப் பெருமான் என்னும் பொருந்திய திருப்பெயரின் மிக்கு விளங்கும்
சிவபிரானை வழிபாடு செய்தோர் சிறுவர் இனிய பால் பெற்ற வகையைக்
கூறக் கேண்மின் தவ முதல்வர்களே!

உபமன்னியர் பாற்கடல்உண்ட வரலாறு

சலிப்பறு தவவ சிட்டன் தங்கையை மணந்து ஞானப்
புலிப்பத முனிவன் ஈன்ற புகழ்உப மனியன் என்னும்
ஒலிச்சிறு சதங்கைத் தாளோன் மாதுலன் உறையுள் மேவிக்
கலிப்பகைச் சுரபித் தீம்பால் உண்டுளங் களித்து வாழ்வாள்.   3

     என்றும் நிலை கலங்காத தவத்தையுடைய வசிட்ட முனிவர்க்குத்
தங்கையை மெய்யறிவினராகிய வியாக்கிர பாதர் மணந்து ஈன்ற புகழப்
பெறும்உப மன்னியர் என்னும் ஒலிக்கின்ற கிண்கிணி அணிந்த சிறுவர்
மாமன் தவச்சாலையில் தங்கி வறுமைக்குச் சத்துருவாகிய காமதேனுவின்
இனிய பாலைப்பருகி உள்ளம் மகிழ்ச்சி மீக்கூர்ந்து வாழும் நாளில்,

தாதையுந் தாயும் ஏகித் தநயனைக் கொண்டு தங்கள்
மேதகும் இருக்கை புக்கு மேவுழிச் சிறுவன் தீம்பாற்
காதரம் எய்தி அன்னை அடிபணிந் திரப்ப அந்நாள்
கோதறு நெல்மா நீரிற் குழைத்திது கோடி என்றாள்.     4