என்றறிய உணர்த்திய நற்பண்புடைய பெருந்தவர் தம் அழகிய மணந்தங்கிய பூவையொக்கும் திருவடிகளை வணங்கி யதுகுலத்துள் தோன்றிய பலராமன் அத்தவத்தவருடைய ஆணைவழிக் காஞ்சியை அடைந்து அங்குப் பொருந்தியவளங்கள் அனைத்தையும் கண்டுவந்தனன். நோக்கி உவந்தான்-என மாறுக. இறைவனும் விழா எனும் அடைவில் எழுந்தருளிக்காணும் வளத்தது காஞ்சி (திருநக. 70) காண்க. தெறுமழுப் படைச்சிவ தீர்த்தம் யாவையும் முறைமையின் ஆடினான் முரசு கண்படா இறையவன் கோயில்கள் எவையும் போற்றிவண் டறைபொழில் ஏகம்பம் அருச்சித் தேத்தினான். 13 | தீவினையை அழிக்கின்ற மழுப்படையை யுடைய சிவபிரான் தீர்த்தங்கள் முற்றவும் விதி வழி நீராடி முரச வாத்தியங்கள் இரவு பகலாக முழங்கும் சிவபிரான் திருக்கோயில்கள் எங்கும் வழிபாடு செய்து வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவேகம்பப் பெருமானை அருச்சனை செய்து துதித்தனன். அந்நகர் வயின்அமர்ந் தருளுஞ் சீர்உப மன்னியன் இணையடி வணங்கித் தொண்டுபூண் டுன்னருந் திருச்சிவ தீக்கை யுற்றனன் தன்னுடைப் பெயரின்ஓர் இலிங்கம் தாபித்தான். 14 | அத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிறப்பினை உடைய உபமன்னிய முனிவர் தம் திருவடிகளை வணங்கி ஏவல் வழிநின்று நினைத்தற் கரிய பெருமை அமைந்த திருச்சிவதீக்கையை அவரிடத்துப் பெற்று ‘பல பத்திரராமேசப்பெருமான்’ எனத் தன் பெயரால் சிவலிங்கம் தாபித்தனன். உண்ணிறை காதலின் அருச்சித் தோகையால் பண்ணிசை மொழிகளிற் பழிச்சும் ஏல்வையின் கண்ணுதற் சிவபிரான் கருணை கூர்ந்தெதிர் விண்ணவர் தொழவிடை மீது தோன்றியே. 15 | உள்ளத்துள் நிறைந்த பேரன்பால் அருச்சனை செய்து உவகையோடும் பண்ணொடு கூடிய பாடல்களாற் பரவும் பொழுதில் நுதற் கண்ணுடைய பெருமான் கருணை மிகுந்து தேவர்கள் தொழுதுடன்வர விடைமே லெதிர் தோன்றி, வேண்டுவ கூறுகென் றருள மெய்யெலாம் பூண்டபே ருவகையின் புளகம் போர்த்தனன் தாண்டவம் நவிற்றுநின் சரணில் ஏழையேற் காண்டகை இடையறா அன்பு நல்குதி. 16 | |