பக்கம் எண் :


584காஞ்சிப் புராணம்


வெள்ளக் கம்பர்

வாலிய சிந்தையான் மலர்ப்பொ குட்டணை
மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை
ஆலிய அன்பினால் அருச்சித் தேத்துவார்
தோலுடற் பொறைகழீ இத் தூய ராகுவார்.         86

     தூய சிந்தையொடும் பிரமன் வழிபடும் வெள்ளக் கம்பரைத் தழைத்த
அன்பொடும் அருச்சித்துப் போற்றுவோர் உடற்பாரம் தவிர்ந்து (பிறவி நீங்கி)
தூயராவர்.

     கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்தொடும் பூசிக்கப் பெற்றமையின்
வெள்ளக் கம்பர் ஆயினர்.

கள்ளக் கம்பர்

மருள்புரி கருத்தினான் மாயன் ஏத்தலின்
கருதும்அப் பெயரிய கள்ளக் கம்பனைத்
திருவடி வழிபடப் பெற்ற சீரியோர்
உருகெழு கொடுவினை மைய லுட்படார்.          87

     திருமால் மயக்குறுத்தும் கருத்தொடும் வழிபடலால் விளங்கும் கள்ளக்
கம்பரை வணங்கும் சிறப்பினர் அச்சத்திற்குக் காரணமாகிய கொடியவினை
மயக்கத்துள் தொடக்குறார்.

நல்ல கம்பர்

உருத்திரன் நலத்தகும் ஒருமை பூண்டுயர்
கருத்தொடும் வழிபடு நல்ல கம்பனை
அருத்தியின் வழிபடும் அடியர் எம்பிரான்
மருத்தபூந் திருவடிக் கலப்பின் மன்னுவார்.        88

     உருத்திரர் ஒன்றுபடும் நல்ல நினைவுடன் வழிபடும் நல்ல கம்பரைப்
பேரன்பினால் வழிபடும் அடியவர் எம்முடைய பெருமானார் தம் மணம்
கமழும் மலரடிக் கலப்பினாலே எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்.

கருதரு நல்லனே கள்ளன் வெள்ளனேர்
தருதிரு வேகம்பன் என்று தன்னொடு
மருமலர்க் கவிழ்இணர் மாவின்! நீழல்வாழ்
ஒருவனே நால்வகை உருவம் மேயினான்.         89

     மணந்தங்கிய மலர்களைக் கொண்ட மாவடியில் எழுந்தருளியுள்ள
ஒருவரே சிந்தித்தற்கரிய நல்ல கம்பர், கள்ளக் கம்பர், வெள்ளக் கம்பர்,
வெளிப்படுகின்ற திருவேகம்பர் என நால்வகைத் திருவுருத் தாங்கினர்.

தென்னுயர் கச்சியின் அகில சித்தியும்
மன்னுயிர்க் குதவிய மகிழ்ந்து நம்பிரான்
அன்னணம் பூசைகொண்ட டருளி மூவர்க்கு
முன்னிய வரங்களும் முறையின் நல்கினான்.       90