பக்கம் எண் :


588காஞ்சிப் புராணம்


அந்நிலையே எவற்றிற்கும் காரணமாயும், ஒளியாயும், இன்பமாயும், விளங்க
முளைத்தது வாயுலிங்கம். ஏலவார்குழலி! என்றும் அதன்கண் இனிதுறைவோம்.

வாலிமுன் தொழுது நேர்ந்தார் வலத்தினிற் பாதி யாண்டுந்
தோல்விஇல் வாகை யோடும் பெற்றனன் தோகாய் என்றான்
கோல்வளை வாலி என்பான் யார்எவன் குமரன் மற்றுன்
பால்வரம் பெற்ற தெவ்வா றென்றலும் பகர லுற்றான்.      105

     இமய மயிலே! வாலி முன்னர் வணங்கித் தன்னொடு போரில்
எதிர்த்தவர் யாவராயினும் அவர் வலிமையில் செம்பாதியும், தோல்வியில்லாத
(பிறக்கிடாத) வெற்றியும் வேண்டுமென வேண்டிப் பெற்றனன். அழகிய
வளையுடைய அம்மை ‘வாலி என்பான் யாவன்? அவன் தந்தை யார்?
உம்மிடம் வரம் பெற்றது எங்ஙனம்? எனவினவலும் வகுத்துரைப்பார்.

பண்ணவர் முனிவர் ஆன்றோர் பாங்குற மிடைந்து வைக
விண்ணவர்க் கிறைவன் புத்தேள் வேத்தவைத் தவிசின் மேனாள்
நுண்ணிடை அணங்கு நல்லார் மின்கொடி நுடக்கம் மானக்
கண்ணெதிர் ஆடும் ஆடல் கண்டுவீற் றிருந்தா னாக.        106

     தேவரும், முனிவரும், அமைந்தோரும் சூழ்ந்து வீற்றிருப்பத்
தேவேந்திரன் அரசவைக்கண் அரியணையிலிருந்து கண்ணெதிரே
அரம்பையர் மின்னற்கொடியின் துவட்சியைப்போல் நுடங்கி ஆடும்
ஆடலைக் கண்டு கொண்டிருந்தகாலை.

அங்கவர் ஆடல் காணும் ஆசையால் இருள்கால் சீக்குஞ்
செங்கதிர்க் கடவுள் மான்தேர் செலுத்துறும் அருணன் ஆங்கண்
வெங்கதிர் விடைபெற் றேகி அரம்பையர் விண்ணோ ரெல்லாம்
எங்கணும் நிறைந்த வாற்றால் இடம்பெறா திதனைச் செய்வான்.  107

     இருளைத் துரக்கும் சூரியனது தேரைச் செலுத்தும் அருணன்
அரம்பையர் ஆடலைக் காணும் ஆசையால் தலைவனிடம் விடைகொண்டு
போய்த் தேவ மகளிரும் தேவரும் எங்கும் நிறைந்தமையால் இடம்
கிடைக்கப்பெறா திதனை மேற்கொள்வான்.

அற்புத வனப்பின் வாய்ந்த அரம்பையர் எவர்க்கும் முன்னர்
நிற்பது நோக்கித் தானும் நேரிழை வடிவு கொண்டு
பொற்புறும் ஆடல் பார்த்து நிற்றலும் புல்லார் உட்கும்
மற்பொலி குலிசப் புத்தேள் அத்தகை வடிவைக் கண்டான்.  108

     வியக்கத் தக்க அழகினையுடைய அரம்பையர் யாவர்க்கும் முன்னாக
நிற்பதனை நோக்கி அருணனும் மகளிர் வடிவைக்கொண்டு பொலிவு மிகும்
ஆடலைப் பார்த்து நிற்றலும் பகைவர் வெருவும் வலி விளங்கும்
வச்சிராயுதத்தையுடைய இந்திரன் அந்த அழகிய வடிவைக் கண்டனன்.