பக்கம் எண் :


634காஞ்சிப் புராணம்


வருந்தினவோ! அல்லது என்மடிமேல் அசைதலால் நொந்தனவோ! என்று
தன்மனத்தில் ஐயங்கொண்டனள்.

மெல்ல னிச்சமும் குழைக்கும்எம் பிரான்திரு மேனி
கல்லெ னக்கடுந் திட்பமும் தட்பமும் கதுவும்
புல்லி யேனுடல் வைகலான் உளைந்தது போலும்
அல்ல தொன்றறி யேன்என வெரீஇயினன் அனந்தன்.    159

     மெல்லிய அனிச்சமலரையும் குழையச் செய்யும் எம்பெருமானது
திருமேனி ஆனது, கல்லையொப்பக் கடுமையும், திண்மையும், சில்லிடுதலும்
(குளிர்ச்சி) மேவும் கீழ்மையேன் உடலில் வீற்றிருந்தலால் வருந்தியதுபோதும்,
வேறோர் காரணத்தையும் அறிகிலேன்! எனப் பயமெய்தினன் ஆதிசேடன்.

எருத்த மீதுகொண் டுலகெலாம் கொட்புறும் என்னான்
மருத்து ழாய்முடி மாமறு மார்பினான் மேனி
வருத்த முற்றதே யாங்கொல்என் றெண்ணினன் வலியால்
உருத்த மாற்றலர் முனைகெடப் பொருதிறல் உவணன்.   160

     வெகுண்டெழுந்த பகைவருடைய வலிகெடத் தன் வன்மையால்
பொருகின்ற மிடலுடைய கருடன், பிடரிமீது கொண்டு உலகெலாம் சுழன்று
வரும் தன்னால் மணம் கமழும் துளவத்தாமம் அணிந்த திருமுடியினையுடைய
சீவற்சம் என்னும் மறுவினை மார்பில் உடைய மாயனார் திருமேனி
வருத்தமெய்தியது ஆகும் கொல்லோ!’ என மதித்தனன்.

இன்ன வாறிவர் யாவரும் வேறுவே றெண்ணிப்
பன்ன ரும்பெருங் கவலைகூர் வுழிவரை பயந்த
கன்னி பாகனார் திருநடக் கருணையில் திளைத்த
பின்னை நாயகன் யோகமாத் துயில்பிரிந் தெழுந்தான்.  161

     இங்ஙனமாக இவர் யாவரும் வேறு வேறு காரணங்களை எண்ணிச்
சொல்லற்கரிய பெருவருத்தம் அடையும்போது இமய மன்னன் ஈன்ற
கன்னியைப் பாகங்கொண்டவர் திருக்கூத்தின் அருள்வெள்ளத்தில் திளைத்த
இலக்குமி நாயகனார் யோகநித்திரையினின்றும் நீங்கித் துயிலுணர்ந்தனர்.

கண்ட பேரின்ப அனுபவக் கருத்தினோ டெழுந்து
மண்டு வெள்ளநீர் அருவிகண் பொழியமன் றுடையார்
தொண்ட னேற்கெளி வந்தவா றெனக்களி துளும்பிக்
கொண்ட காதலால் அஞ்சலி சென்னிமேற் குவித்து.    162

     பெற்ற பேரின்ப அனுபவ நினைவோடும் துயிலுணர்ந்து செறிந்த
வெள்ளப் பெருக்கைக் கண்கள் அருவியாகப் பொழிய அம்பலவாணர்
அடியனேனுக்கு எளியராய்க் காட்சியளித்தவாறு ஆவா எனக் களிப்புத்
ததும்பித் தோன்றிய பேரன்பால் சிரமேற் கரங்குவித்து.