பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 637


     ‘யோகியரும் பெறற்கரிய திருக்கூத்து மெய்யன்பர்க் கெளிதாய்க்
காண்டற்குரியதாகும்; அதனைக் காண்மின். செல்வோம் இனி எம்முடன்
வம்மின்’ எனப்பேசி வான வழியால்; விளங்குகின்ற ஒளியுடைய தில்லையை
வந்தடைந்தனர்.

மேற்படி வேறு

சேர்ந்துதிரு மூலட்டந் தொழுது போற்றிச் சிந்தைகளி
கூர்ந்துதிருப் பாப்பரசு கலுழன் முதலோர் உடன்குழும
நேர்ந்ததவ யோகத்தின் நெடுநாள் முயன்றான் அக்காலை
வார்ந்தசடைப் பிரானாரும் மகி்ழ்ந்து காட்சி கொடுத்தருளி.   172

     எய்தித் திருமூலத்தானரைத் தொழுது துதி செய்து சிந்தையில்
களிப்புமிக்கு இலக்குமி, ஆதிசேடன், கருடன் முதலானோர் சூழ வாய்த்த
தவயோகத்திற் பன்னெடுங்காலம் முயன்றனர். அப்பொழுது நீண்ட
சடைமுடியையுடைய பெருமானாரும் உவந்து திருக்காட்சி அருள்புரிந்து.

ஒன்னாதார் உயிர்பருகி ஒளிருந் திகிரித் தனிப்படையோய்
என்நீமற் றிவரோடும் எம்பால் விழைந்த தியம்புகெனப்
பொன்னாடை யுடைத்தோன்றல் புவியின் வீழ்ந்து பணிந்தெழுந்து
நன்னாமம் எடுத்தோதிப் புகழ்ந்து போற்றி நவில்கின்றான்.    173

     பகைவர் உயிரைப் பருகிச் சுடர்விடும் சக்கரமாகிய ஒப்பற்ற படையை
யுடையோனே! நீயும் இவரும் எம்மிடத்து விரும்பிய வரங்களைக் கூறுக!
என்றருளப் பீதாம்பரத்தை தரித்த மால் நிலத்தில் வீழ்ந்து பணிந்தெழுந்து
திருப்பெயர்களை எடுத்தோதிப் புகழ்ந்து துதி செய்து கூறாநிற்பர்,

அண்ணலே ஆனந்தத் தெள்ளா ரமுதேங் அடியேகள்
புண்ணியநின் திருக்கூத்தின் அமுதம் பருகிப் பொலிவெய்த
உண்ணிறைந்த பெருங்காதல் உடையேம் கருணை செய்தருளாய்
எண்ணியார் எண்ணமெல்லாம் முடிக்க வல்ல எம்மானே.     174

     ‘தலைவனே! தெள்ளிய பேரின்ப அமுதமே! அடியரேம் புண்ணியப்
பயனாகிய நின் திருக்கூத்தின் விளையும் அமுதத்தை நுகர்ந்து சிறப்புற
உள்ளத்துள் நிரம்பிய பெரு விருப்பினை உடையோம் அதனால் கருணை
கூர்ந்து அருள்பாலிப்பாய். எண்ணியவர் விருப்பினை நிறைவு செய்ய வல்ல
எம்பெருமானே!’

குறளுருவாய் உலகளந்தான் இயம்புங் கூற்றுக் கேட்டருளி
அறவனார் எதிர்மொழிவார் ஆழிப் படையோய் எவ்வெவரும்
பெறலரிய நடங்காணப் பெட்டா யாகில் எம்இலிங்கம்
மறன்அணுகாத் திருக்காஞ்சி வரைப்பின் எய்தித் தாபித்து.   175

     வாமனராய்ப் பின்பு திரிவிக்கிரமமூர்த்தியாய் மூவுலகையும் கொண்ட
திருமால் விண்ணப்பத்தைத் திருச்செவிசாத்தி அறவடிவினர்.