பக்கம் எண் :


638காஞ்சிப் புராணம்


விடையளிப்பார்: சக்கரப்படையோனே! எத்திறத்தினரும் பெறலாகாத திருக்
கூத்துக் காண விரும்பினை எனின், பாவம் நெருங்காத சிறப்பினையுடைய
திருக்காஞ்சியில் எமக்கு வடிவாம் சிவலிங்கம் நிறுவி,

விண்டு காஞ்சியில் விமலனை வழிபடல்

நறுமலர்கொண் டருச்சித்து வல்லை ஈண்டு நண்ணுதிநின்
உறுகருத்தை முடிக்கின்றேம் என்றாங் கருளும் உரைகேளா
மறுவிகந்த மனத்தன்பின் மாயோன் அங்கண் யாவரையும்
நிறுவிவள வயற்காஞ்சி நெடுநீர் நகரங் கடிதடைந்தான்.    176

     ‘நறிய மலர்களைக் கொண்டு அருச்சனை செய்து விரைந்திங்கே
எய்துதி. நின் மிக்க நினைவை முற்றுவிப்போம்’ என்று தில்லையில்
அருளிய திருமொழியைக் கேட்டுக் குற்றம் நீங்கிய அன்பினையுடைய
திருமால் அவ்விடத்தே யாவரையும் நிற்பித்து வளமுடைய வயல்சூழ்
பெருநீரினையுடைய காஞ்சிமா நகரைக் கடிதடைந்தனர்.

ஏகம்பத் தொளிமணியை இன்பத் தொழும்பர் செய்தவங்கள்
ஏகம்பத் தெனக்கொள்ளும் இறையைக் குறளாய் மாவலிமுன்
ஏகம்பத் தாற்புரிசை ஒருமூன் றிறுத்த தனிமுதலை
ஏகம்பத் தொடும்புளகம் எய்த வணங்கித் தொழுதெழுந்து   177

     திருவேகம்பத்தில் எழுந்தருளிய ஒளிவிடும் மணியை, இன்பத்திற்கு
ஏதுவாகிய தொண்டர் செய்தவத்தினை ஒன்று பத்தாகப் பெருக்கி வழங்கும்
இறைவனை, வாமனராய் மாவலி முன் சென்ற திருமாலாகிய அம்பினால்
மும்மதிலையும் அழித்த ஒப்பற்ற முதல்வனையே மெய் பனித்தலுடன்
உரோமம் சிலிர்ப்ப வணங்கித் தொழு தெழுந்து,

அக்கம்பம் உடையார்க்குத் தென்பால் அங்கண் சிவலிங்கம்
மிக்கன்பு தழைத்தோங்க விண்டு வீசன் எனஇருவிப்
பொக்கங்கள் முழுதகலப் போற்றி வேண்டி அருள்பெற்றுத்
திக்கெங்கும் புகழ்பரப்புந் தில்லை வனத்தை மீண்டணைந்தான்  178

     திருவேகம்பத்திற்குத் தெற்கில் அன்பு மீக்கூர்ந்து செழித்து ஓங்க
விண்டு ஈசன் எனப் பெயரிய சிவலிங்கம் தாபித்துப் பொய்மை அகல
மெய்மையே பொருந்தப் போற்றி விண்ணப்பித்து அருளைப் பெற்ற பின்னர்
திசையெல்லாம் தனது புகழைப் பரப்புந் தில்லை மரம் நிறைந்த காடாகிய
தலத்தை மீண்டும் அணைந்தனர்.

விண்டு முதலியோர் திருக்கூத்துக் காணல்

ஆண்டணைந்த திருமாலுக் கருளா ரமிழ்த மனையாரும்
தூண்டரும்பே ரொளிப்பிழம்பாய்ச் சுடருந் திருச்சிற் றம்பலத்துள்
காண்டகைய ஆனந்த நிருத்தங் காட்டக் கழியன்பு
பூண்டதிருப் பாப்பரசு புள்ளேற் றண்ண லொடுங்கண்டான்.    179