பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 639


     சிதம்பர நகரைச் சேர்ந்த திருமாலுக்கு அருள் செய்கின்ற அரிய
அமிழ்தத்தை ஒத்த சிவபெருமானாரும் தூண்ட வேண்டாத பேரொளி
வடிவாய்ச் சுடர் விடும் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே காணத்தக்க
பேரின்பக் கூத்தினை அருள மிக்க அன்பு பூண்ட இலக்குமி, ஆதிசேடன்,
கருடன் இவர்களோடும் திருமால் தரிசனம் செய்தனர்,

கண்டளவில் பெருங்காதல் இன்ப வெள்ளங் கரைஇகப்பக்
கொண்டநிறை மகிழ்ச்சியினால் ஆடிப் பாடிக் கும்பிட்டுப்
பண்டைநிலை மறந்துமதுப் பருகுஞ் சுரும்பிற் பரவசனாய்
மண்டியபே ரார்வத்தால் வணங்கித் தொழுது களிசிறந்தான்.    180

     கண்டபொழுதே பேரன்பும், பேரின்பப் பெருக்கும் கைகடந்து பொங்க
நிறைவு கொண்ட உவகையினால் ஆடியும், பாடியும், கும்பிட்டும் பண்டைய
நிலையை மறந்து தேனைப் பருகிய வண்டினைப் போலத் தன்வய மிழந்து
செறிந்த பெருவிருப்பினால் வணங்கித் தொழுது களிப்பான் மிக்கனர்.

     இறைவனார் திருக்கூத்துக் கிசையக் கணங்கள் இயம் முழக்கும்,
முறைஉணர்ந்து பெருங்களிப்பால் தானும் படகம் முழக்குதலும்,
மறைமுதல்வர் அதுநோக்கி மகிழ்ந்து படகப் பணி தனக்கே,
நிறைவிருப்பின் அருள்செய்யப் பெற்று வாழ்ந்தான் நெடியோனே.  181

     பெருமானார்தம் திருநடத்திற்குத் தக்கபடி சிவகணங்கள் இன்னிசை
எழுப்பும் வழக்கறிந்து பெருங்களிப்பினால் திருமாலும் முரசினைக்
கொட்டுதலும் வேத முதல்வர் அதனைப் பார்த்து மகிழ்ந்து பேரிகை
முழக்கும் திருத் தொண்டினைப் பெருவிருப்பொடும் தனக்கே அருளுதலைச்
செய்யப் பெற்றமையால் அவர் வாழ்வு பெற்றனர்.

விதுவொன் றுஞ் சடைமுடியார் விண்டு வீசம் வந்தவா
றிதுகண்டீர் முனிவீர்காள் ஈண்டுத் தொழுது வழிபட்டுத்
துதிசெய்து கணநாதர் திருமா ளிகைசூழ் தருமுன்றின்
மதுவிள்ளும் மலர்க்கூந்தல் மலையான் மடந்தை எய்தினாள்.   182

     முனிவீர்காள்! சந்திரனைத் தரித்த பெருமானார் வீற்றிருக்கும் விண்டு
(விட்டுணு) வீச வரலாறு ஈ தாகும். இத்தலத்தில் வணங்கி வழிபாடு செய்து
பரவித் திருமாளிகையில் கணநாதர் வலம்வரு கோயிலின்முன் தேனைச்
சொரியும் மலரணிந்த கூந்தலையுடைய மலையரையன் மகளார் எய்தினர்.

அகத்தியேச்சர வரலாறு

     பண்ணிசைந்த வரிச்சுரும்பர் பாடல் பயிலும் மலர் இலைஞ்சித்,
தண்ணிசைந்த சிவகங்கைத் தழங்குந் திரைநீர் குடைந்தாடிப்,
பெண்ணிசைந்த பெருவனப்பின் பிராட்டி