அருக்கி யம்முத லாயின கொண்டு வழிபடூஉப் பெருத்த காதலிற் பேணித் தொழுது வணங்கலும் கருக்க டிந்துயர் காழறு மாதவன் ஓகையான் மருத்த பூஞ்சுனை விந்த வரைக்கிது பேசுவான். 187 | அருக்கிய பாத்திய ஆசமனம் கொண்டு பூசனை புரிந்து பெருவிருப்பினாற் போற்றி வணங்கியகாலைப் பிறப்பினை நீக்கினமையால் உயர்ந்த குற்ற மற்ற பெருந்தவர் மகிழ்ச்சியொடும் மணமுடைய பூக்களைக் கொண்ட சுனைகள் அமைந்த விந்த மலை வேந்தனுக்கிதனைக் கூறுவார். மன்னும் மெய்த்தவர் பாற்புரி யும்வழி பாட்டினில் நின்னை யொப்பவர் கண்டிலன் இத்தகு நின்னையும் பொன்னி னாட்டவர் போத இகழ்ந்தனர் அன்னதை உன்னி உன்னி வருந்திடு கின்றதென் உள்ளமே. 188 | நிலைபெறும் உண்மைத் தவமுடையார்மாட்டுச் செய்யும் பூசனையில் நினக்கு நிகராவார் ஒருவரையும் காண்கிலேன். இங்ஙனம் உயர்ந்த உன்னையும் தேவர் பெரிதும் பழித்தனர். அதனைப் பல்காலும் எண்ணி என்னுள்ளம் வருந்தாநின்றது. என்ற தாபத வேந்தனை மீள இறைஞ்சிமுன் நின்று தேவருள் யாவர் இகழ்ச்சி நிகழ்த்தினார் என்ற னக்கிகழ் யாதுகொல் கூறினை யேல்அது, மன்ற மாற்றுவன் யானென விந்தம் வகுத்ததால். 189 | என்றுரைத்த தவராசர் ஆகிய நாரதரை மீண்டும் வணங்கி எதிர்நின்று ‘தேவருள் வைத்து யாவர் இகழ்ந்தனர்; அத்தகு குற்றம் யாது? விளக்கினால், அக் குற்றத்தை ஒரு தலையாகப் போக்கிக் கொள்வேன் யான்’ என்று விந்தம் விரித்தது. முனிவன் அவ்வுரை கேட்டு மொழிதரு மேன்மையிற் புனித நின்னொடு பொன்வரை நேரெனும் நூலெலாம் பனிம திச்சடைப் பண்ணவர் தேவர் குழாத்தொடு நனிம கிழ்ந்தவண் வைகுவர் நாள்தொறும் ஆதலால். 190 | முனிவரர் அவ்வுரையைக் கேட்டுப் பெருமையுடன் விடையளிப்பர்: தூயோனே! நூல்களியாவும் நின்னொடு மேருமலை ஒப்பாகும் என்று கூறும். சந்திரசேகரர் தேவர் குழாத் தொடும் அம்மேரு மலையில் விரும்பி வீற்றிருப்பர் எப்பொழுதும். ஆகலான், இயங்கு கோள்கள் உடுக்கள் இராசி எவற்றொடும் வயங்கு சந்திர சூரியர் தாம்வட மேருவை நயந்து சுற்றுவர் நாள்தொறும் அத்திறம் நோக்கியே உயங்கு கின்றனன் யானெனப் பின்னரும் ஓதுவான். 191 | |