ருத்திரனைக் காட்டும் ஒன்று, தன்பகுப்பின் மூர்த்திகளோ டென்றுழ் காட்டுந் தவிசொன்றா மடங்கலணை நான்கு மன்னும். ஓர் சிங்காதனம் தன்பகுப்பினராகிய மூவரோடு முனிவருந் தேவருந் துதிசெய்ய வீற்றிருக்கின்ற பிரமனைக்காட்டும்; ஓர் ஆசனம் தன்னைச் சார்ந்தவர்க்குத் தன்பகுப்பினராகிய மூவரோடு இலக்குமி முதலோர் சூழ இருக்கும் திருமாலைக் காட்டு்ம்; ஓர் தவிசு தன்னை அடுத்தவர்க்குத் தன் பகுப்பினராகிய மூவரொடு கணங்கள் துதிசெய்யும் காலாக்கினி உருத்திரரைக் காட்டும்; ஓர் இருக்கை, தன்னை அடுத்தவர்க்குத் தன் பகுப்பினராகிய மூர்த்திகளோடு சூரிய மூர்த்தியைக் காட்டும் ஆக நான்கு சிங்காதனம் அக்காஞ்சியில் நிலைபெற்றிருக்கும். பிரமன் வியூகர் விராட்டு, காலன், புருடன், திருமால் வியூகர். சங்கரிடணன், பிரத்தியும்னன், அநிருத்தன், உருத்திரர் வியூகர், அரன், மிருடன், பவன். சூரியன் வியூகர்: தண்டியாதிகள், தீப்தி முதலிய நவசத்திகள், அங்கமூர்த்திகளாக நவக்கிரகாதிகள், இவ்வியூகர்கள் தம் முதல்வர்கள் ஆணைபெற்று முத்தொழில் செய்வர். ஐந்து தருக்கள் ஓவாமை அமிழ்தொழுக்கும் பொலம்பூர் சூதம் தன்னிழலைப் பிறர்க்குதவாக் காஞ்சி ஒன்று, பூவாது காயாது கனிகள் நல்கும் பூம்புளிபல் வகைப்போதுந் தரும தூகம், தாவாத செம்பொன்மலர் அத்தி யென்றா சாற்றரிய தெய்வதமாத் தருக்கள் ஐந்துந், தேவாதி தேவர் இனி தமருங் காஞ்சித் திருநகரின் இறும்பூது திகழ ஓங்கும். 11 நீங்காது என்றும் அமுதத்தைச்சொரியும் பொன்னிறப் பூக்களையுடைய மாமரம் ஒன்றும், தன்னிழலைப் பிறர்க்குக் கெடாத காஞ்சி மரம் ஒன்றும், பூத்தலும் காய்த்தலும் இன்றிப் பழங்களை ஈனும் பொலிவுள்ள புளியமரம் ஒன்றும், தன் பூக்களையே அன்றிப் பல்வகை மலர்களையும் கொடுக்கும் இருப்பைமரம் ஒன்றும், கெடாத செம்பொன்மயமான பூக்கள் மலரும் அத்திமரம் ஒன்றும் ஆகச்சொல்லற்கரிய தெய்வத்தன்மையுடைய மரங்கள் ஐந்தும் மகாதேவர் இனிது வீற்றிருக்கும் காஞ்சிமாநகரில் வியப்புண்டாகச் சிறக்கும். ஐந்து தடாகங்கள் எல்லியிடைப் பங்கயமும் பகற்கா லத்தின் இருங்குமுதச் செழும்போதும் மலர்ந்து தீந்தேன், பில்குவதொன் றொருகாம்பின் முளரி மூன்று பிறங்குபுனல் தடம்ஒன்று குளித்தோர் எய்த, வல்லைவா னரத்துருவம் அளிப்ப தொன்று மூழ்கினோர் மாற்றர்க்குக் கொடிய தீமை, நல்குவதொன் றாடினோர் உற்றார்க்கின்ப நலந்தருவ தொன்றெனலாந் தடாகம் ஐந்தே. 12 |