ஒப்பில்லாத காஞ்சிப் புராணத்தை வளமமைந்த தமிழாற் செய்க எனப் பெருநிலத்தவர் புகழ்ந்து கூறும் அழகிய மதில் சூழ்ந்த கச்சித் திருவேகம்பர் தம் திருவருட் பேற்றினர் கூறிய சிறப்பினானும், உள்ளத்தெழும் ஆசையானும் இந்நூலுரைக்கப் புக்கேன். அம்-சாரியை, ‘அண்ணல் அம்கடிநகர்’ (சீவ-78) உரிய என்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது; ‘புகழ்புரிந்தில்’ (திருக். 59) ‘ஆசையாற் சொல்ல லுற்றேன்’ (திருத்.) அவை யடக்கம் மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவம் ஆய வேல்அவை அருள்மய மாகும்மற் றதுபோல் பேய னேன்பிதற் றுரையும்ஏ கம்பர்தம் பெருமை தூய காதையுள் ளுறுதலால் துகளறத் தோன்றும். 23 | மாயாகாரியப் பொருள்களாகிய கல், மண், பொன் முதலியனவும் எமது தலைவனாகிய சிவபெருமானது திருவுருவங்களாகச் சமைக்கப் பெறின், அவை அருள் வடிவங்க ளாகும். அவ்வாறே பித்துற்றோர் நிலையில் கூறும் எனதுரையும் சொன்மாத்திரையால் தாழ்ந்தும், இறைவன் வரலாறுகளாம் பொருட்பொலிவானே குற்றமற விளங்கும். பேயரும், பித்தரும், பத்தரும் ஒருவழி ஒற்றுமையும் உடையர் ஆகலின் பேயனேன் என அருளினர். பித்தேறிய உரை பிதற்றுரை என்க. பித்து, பேரன்பு. இழித்த சொற்புணர்த் தெளியனேன் இயம்பிய கவியும் கழித்த ஐவகை இலக்கண வழுவுக்குக் காட்டாப் பழித்தி டாதெடுத் தாளுவர் பல்வகைச் சுவையும் கொழித்த நாவின ராகிய வழுத்தபு குணத்தோர். 24 | இழிவுடைய சொற்களால் ஆக்கிய தம் பாக்களையும் ஐவகை யிலக்கண வழுக்களுக்கு இலக்கியமாக (மேற்கோளாக) இகழாது எடுத்தாளுவர்; சொற்சுவை பொருட்சுவை பலவும் வடித்தெடுத்து வல்லாங்குக் கூறும் இலக்கிய வழுக்களின் நீங்கிய நல்லியல்பினோர். எளிமை-செஞ்சொல், இலக்கணைச்சொல், குறிப்புச்சொல், இவற்றொடு திட்ப நுட்பங்கள் செறியாமை. இது கற்றோரை நோக்கியது. எழுத்துப் போலியும் எழுத்தென ஆளுவர் அதுபோல் புழுத்த நாயினேன் பிதற்றிய செய்யுட்போ லியையும் பழுத்த கேள்வியோர் கைக்கொள்வர் என்பது பற்றி விழுத்த நாணினேன் சிவகதை விளம்புதற் கிசைந்தேன். 25 | |