பக்கம் எண் :


இராவண காவியம் 151

   
           64.  மன்றலஞ் சேர்புற வாய்மலர் தோய்ந்த
               தென்றல் புகுந்து சிறுவர்க ளாடும்
               முன்றலி னீள்மர மொய்ம்மலர்ப் பந்தர்
               ஒன்றி மலர்மண மூட்டி யுதிர்க்கும்.

           65.  புனைமணி மாடப் புதுமனை முன்றிற்
               கனிமரம் பாடிக் கரும்பயில் மின்னார்
               கனிதர வாடுதல் கண்டுளு வந்து
               கனிதர வுண்டு களிக்குவ ருள்ளம்.

           66.  பொற்றொடி யேங்கப் புறமனை முன்றில்
               உற்றினை யாதுநீ ரூற்றி வளர்த்த
               சி்ற்றிடை போன்ற செழுங்கொடி முல்லை
               முற்றிழை வாட முறுவலித் தாடும்.

           67.  அட்டிலை யேன மணிசெயல் போலத்
               தட்டு்முட் டில்லஞ் சமைவுறும் பேராப்
               பெட்டியொ டொண்சுவர்ப் பேழைசெம் பொன்னோ
               பட்டொடு நன்கலப் பாங்கது செய்யும்.

           68.  ஆடமைத் தோளிய ரந்நடு வூரில்
               ஆடிய நீர்வெளி யாகிட யாணர்
               கூடிய வாடு குளந்தனி லாடி
               மேடையி னின்று விளக்குவ ரைம்பால்.

           69.  பாடக மூடும் படிநெடு நேரம்
               நாடக மாடு நலங்கிளர் நல்லார்
               ஆடக மாக வமைத்தசெய் குன்றங்
               கூடக மாகக் கொடுபயன் கொள்வார்.
-------------------------------------------------------------------------------------------
           64. மன்றல் - மணம். புறவாய் - வீட்டின் பின்புற வாயில். மணம் ஊட்டி
மலர் உதிர்க்கும் என்க. 65. அயில்தல் - உண்ணல். கனிதர - இனிமையாக. மின்னார்
கனிதரப் பாடியாடுதல் கண்டு உவந்து மரம் கனிதருமென்க. 66. ஏங்க - ஒலிக்க.
இனையாது - வாடாது. முற்றிழை - பெண். முறுவலித்தல் - சிரித்தல், பல்போல மலர்தல்.
67. அட்டில் - சமையலறை. ஏனம் - பாத்திரம், தட்டுமுட்டு, வீட்டுப் பண்டம். அகப்பை
முதலியன. பேராப் பெட்டி - பீரோ. சுவர்பேழை - அலமாரி. 68. அமை - மூங்கில்.
யாணர் - புதுநீர். ஐம்பால் - கூந்தல். 69. பயன் - விளையாட்டு.