பக்கம் எண் :


இராவண காவியம் 195

   
         56.    வடிவேல்விழி மானை வழிப்படவும்
               மடியாமதி வால்விளை யாடிடவும்
               வெடியாமலர் வேங்கையி னொண் சினைதாழ்
               கொடியூசலி னாடுவர் கொம்பனையார்.

         57.    விண்பொத்திய வீங்கிருள் மென்குழலார்
               பண்பொத்திய செந்தமிழ் பாடியிள
               மண்பொத்திய பாவை வலம்பெறுவார்
               கண்பொத்தியே கண்டு பிடித்திடுவார்.

         58.    வளையாடு மலர்ச்சுனை நீரினிடை
               வளையாடுகை மங்கைய ரன்னமென
               விளையாடுவ ரோடுவர் கூடுவர்பின்
               விளையாடுவர் பைங்கிளி மேவுறவே.

         59.    கண்டேகுற மாதர் களித்திடவே
               கொண்டாடியே தோழியர் கொட்புறவே
               தண்டாமரை வாழ்மட வன்னமென
               வண்டார்குழல் மாது தனித்தனளே.

         60.    தனியான தமிழ்க்கொடி யாங்கொருபூம்
               புனைமாதவி நீழல் பொருந்தினள்பின்
               கனியான தமிழ்ப்பயிர் காத்துவரும்
               இனியானை யெதிர்ப்பட லிற்படுவாம்.
 
கலி விருத்தம்
         61.    பாடியி லிருந்திடு பழந்தமிழர் கோனும்
               நாடியவை நண்ணவினை நல்குமுயிர் நண்பர்
               கூடிவர வேமழை குவிந்துவிளை யாடும்
               கோடுதொறு வேங்கைமலர் குன்றினிடை சென்றான்.

         62.    செந்தினை கறித்திடு சினக்களி றுகைப்பர்
               பொந்தினில் விளித்துழறு புள்ளினை நகைப்பர்
               சந்தன விணர்கொடுயர் சாமர மிசைப்பர்
               மந்திநுனி யேறிய மரக்கிளை யசைப்பர்.
-------------------------------------------------------------------------------------------
         56. வால்மதி - சடையும் முகமும். வெடியா - வெடித்த. 57. மணலில் பாவைசெய்து கல்லொளித்தல். வலம் பெறுதல் - ஒளித்த கல்லைக் கண்டுபிடித்தல். வலம் - வெற்றி. 58. வளை - சங்கு. விளை - விளை நிலம், தினைப்புனம். 59. கொட்புற - சூழ. 61. கோடு - மலைமுகடு