69. ஏனெந் தாயுனக் கென்னபோ வெழுநிலை மாடம் வானந் தாவிய கடிமதி லிலங்கையை வளைக்கும் கானந் தாவிய வடவர்தம் முதுகினைக் காண நானுந் தான்வரு வேனென வழுமொரு நற்சேய். 70. நெஞ்சி லீரமி லாதொரு பெண்ணென நினையா தஞ்சி லோதியை யுருக்குலைத் தோனையென் னண்ணா வஞ்சி மாரிடை யெள்ளியே கெடுத்திட மானம் குஞ்சி யைப்பிடித் திழுத்துவா வென்னுமோர் கோதை. 71. தூரி கட்டியா னாடிட வன்னையைத் துப்பிற் சோரி சிந்திடக் கண்படா வுறுப்பையுந் துணித்த ஆரி யன்சிலை நாணினை யுறுதியா யறுத்துச் சேரு மெந்தையென் பாளொரு தமிழ்மொழிச் சிறுமி. 72. ஆலைப் பாகினு மினியசெந் தமிழ்மொழிக் காக மேலைக் காலைவெம் பகைப்புலக் களிற்றினம் வீழ்த்திப் பாலைப் போன்றவெண் கோட்டினாற் பண்ணிய கட்டிற் காலைப் பாருமண் ணாவென்பா ளோர்கருங் கண்ணாள். 73. முந்தை யாரியப் படையினை முதுகிட வோட்டி எந்தை யன்னவ ரெறிந்துவிட் டோடவே யெடுத்து வந்த வேல்களா லாக்கிய மணிமுகை முல்லைப் பந்தர்க் கால்களைப் பாருமென் பாளொரு பாவை. 74. மாத ராண்மையில் லாதமெல் லியரெனும் வசைச்சொற் போத வெண்ணிடப் படாதகற் றொலைவினிற் புகழ்சேர் மூதின் முல்லையில் லாண்முல்லை யோடிள முல்லை ஓத வாழ்த்திவல் லாண்முல்லை தன்னைமீக் குயர்ந்தார். 75. இன்ன வாறுவல் லாண்களும் பெண்களு மிகலித் தென்னி லங்கைமா மறக்குடிக் குறையுளாத் திகழ மன்னர் மன்னவன் கண்டுயர் மாடிமீ திருந்தே இன்னு மாரியப் பேருள தோவென விகழ்ந்தே. ------------------------------------------------------------------------------------------- 70. அம்சில் ஓதி - அழகிய குளிர்ந்த கூந்தலையுடைய காமவல்லி. 71. துப்பின் - பவளம்போல. நாண் - கயிறு. 74. மறத்தினைத் தாயர் கூறுதல் மூதின்முல்லை; மனைவியர் கூறுதல் இல்லாள்முல்லை; சிறுவர் கூறுதல் இள முல்லை; மறவர் கூறுதல் வல்லாண்முல்லை. வாழ்த்தி சிறுவர் ஓத - பிறர் வாழ்த்திக் கூற. மீக்குயர்தல் - மேம்படுதல். | |
|
|