சந்தித்தேன். அவன் என்னை எடுத்து மார்புறத் தழுவிக்கொண்டான்’ என்றாள். உடனே அவனுடைய தாய், “மகளே நான் உன்னைக் கோபிக்க மாட்டேன், திட்டமாட்டேன்’ வீட்டை விட்டு வெளியே அனுப்பவும் மாட்டேன். இராமன்தான் உனக்கு ஏற்ற கணவன். உன்னை அவனுக்கே மணம் முடிப்போம்.” என்று கூறி அன்புடன் தன் மகளை அணைத்துக் கொண்டாள் என்று மைதிலி மொழி நாட்டுப்புறத் திருமணப்பாடல் ஒன்று கூறுகிறது.47 தமிழில் சீதா கலியாணம் என்னும் வில்லுப்பாட்டு இராமன்-சீதை சந்திப்பைக் கீழ்வருமாறு கூறுகிறது: மிதிலையில் ஒரு மலர்வனத்தில் விசுவாமித்திரர், இலக்குவனுடன் ஓய்வாகப் படுத்துக்கொண்டிருந்த இராமன் தன் காலடியில் வந்து வீழ்ந்த ஒரு பந்தினால் விழித்துக்கொள்கிறான். நந்தவனத்துள் சேடியர் புடைசூழ நின்ற சீதையைக் கண்டு வியந்த இராமன், இந்தரியோ சுந்தரியோ இங்கு இவளாரோ தெரியலையே ஊர்வசியோ மேனகையோ நல்ல உள்நாட்டுக் கன்னிகையோ.... என்று நினைத்தவாறே மற்ற இருவரும் விழித்தெழும் முன் அந்தப் பந்தைத் தனது இடக்கால் பெருவிரலால் தட்டிவிட அது அந்தரமாகச் சென்று சீதையின் இடத் தோள் மீது விழுந்தது. அவளும் இராமனைப் பார்த்து, அவனழகில் மயங்கி வில்விழா பார்க்கவென்று வேடிக்கையாய் வந்தவரோ மன்மதனாய் இருப்பாரோ-என் தோழிகாள் மாலையிட வந்தவரோ-என் தோழிகாள் என்று மதிமயங்கிச் சாய, தோழியர் அவளை அழைத்துச் சென்று கன்னிமாடத்தே சேர்த்தனர். இராமனின் உருவெளித்தோற்றம் சீதைக்குப் புலப்பட்ட காட்சியை வில்லுப்பாட்டு கீழ்வருமாறு காட்டுகிறது.48 கல்தூணைப் பார்த்தாலும் கண்ணன்போல் தோன்றிடுமாம் - அந்த மண்சுவரைப் பார்த்தாலும் மாயன்போல் தெரிந்திடுமாம் திருவிளக்கைப் பார்த்தாலும் சீதைக்கு திருமால்போல் தோன்றிடுமாம்.....
47. Vaidya Nivas Misra, 103. 48. தி. சி. கோமதி நாயகம், 230-32, 241 |