109

தொகுப்புரை

வெற்றியின் பரிசு

இதுவரை  நாம்  அறிந்துள்ள  இந்திய,  வெளிநாட்டு இராமாயண
நூல்கள்  எல்லாம்  இராமன்  வில்வளைப்பதில்  பெற்ற  வெற்றியின்
பரிசாகச்  (வீர்ய  சுல்கம்)  சீதையை மணந்தான் என்று ஒருமுகமாகக்
கூறுகின்றன.

வில்விழாவில் இராவணன்

வான்மீகம்  முதலான   பல  இராமாயணங்கள்  சனகன்  எல்லா
அரசர்களையும்  வில்விழாவிற்கு  அழைத்தான்  என்று  பொதுவாகக்
கூறுகின்றன.   துளசி  ராமாயணமும்  இராமவத்து  என்னும்  பர்மிய
ராமாயணமும்   இராவணனும்,   வாணாசூரனும்  கூடச்சுயமவரத்திற்கு
வந்திருந்தனர்   என்று   கூறுகின்றன.   இவ்   இருவரும்  வில்லை
அசைக்கக்கூட    முடியவில்லை   என்று   துளசிராமாயணம்   கூற,
இராவணன்  மட்டும்  வில்லைத்  தூக்குகிறான்.  ஆனால்  நாணேற்ற
முடியவில்லை  என்று  இராம வத்து கூறுகிறது. பிரசன்ன ராகவ, பால
ராமாயணம்   என்னும்  சமஸ்கிருத  நாடக  நூல்கள்   துளசிதாசரின்
கூற்றுக்குரிய    மூலங்களாக   அமைகின்றன   என்று   அறிஞர்கள்
கருதுகின்றனர்.51

சுயம்வர மண்டபத்தில் சீதை

இராமன்  வில்லை  முறித்த  செய்தி  தோழியர்  மூலம் சீதைக்கு
அனுப்பப்பட்டதாக  வான்மீகம்,  கம்ப  ராமாயணம் போன்ற நூல்கள்
கூறுகின்றன.    துளசியோ    சீதை   சுயம்வர   மண்டபத்திலேயே
இருந்ததாகவும்,   வில்லின்  கனம்  குறைந்து  இராமனுக்கு  லகுவாக
வேண்டும்    என்று    மண்டபத்திலேயே    தனக்குள்   வேண்டிக்
கொண்டதாகவும்,  இராமன்  வில்லை  முறித்ததும் இராமன் கழுத்தில்
வெற்றி  மாலையைச்  சூட்டினாள் என்றும் கூறுகிறார். வீர்ய சுல்கமாக
வான்மீகி,    கம்பன்    முதலானோர்    காட்டியதைத்   துளசிதாசர்
சுயம்வரமாக மாற்றிப் படைத்ததால் அந்த மரபுப்படி சீதையும்


51. Shankar  Raju  Naidu,  133, 134;  Rev. Camille  Bulcke,
   “Ramacaritamanasa  and its Relevance to Modern Age”,
   The Ramayana Traditions in Asia, P. 63.