கூறும் இடத்தில் வள்ளுவர் ‘புலனடக்கத்தை’ உயர்த்திப் பாடவில்லை. கம்பனோ நாட்டு வருணனை, மக்கள் வருணனை என்ற இரண்டையும் சொல்லும்போது, நாட்டினுடைய வளத்தைவிட, மக்களுடைய வளம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைந்து சொல்கிறான் என்று சொல்லத் தோன்றுகிறது. காரணம் முதல் பாட்டின் முதல் வரியிலேயே மக்கள் மன வள?த்தை எடுத்துப் பேசுகிறான். கோசலத்தில், ‘ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் காசு அலம்பும் முலையவர் கண் எனும் பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்’ (கம்பன் - 12) என்கிறான். எவ்வளவோ வளங்கள் பின்னே கோசலத்துக்குப் பேசப் போகிறான். அவை எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த வளம் எது என்றால், ‘அம்பு புறஞ் செலாக் கோசலம்’ என்பதுதான். ஆகவே, மக்களாக வாழப் பிறந்தவர்கள் மிகப் பண்புடையவர்களாக, பொறிபுலன்களை அடக்கி ஆள்பவர்களாக வாழ்வதுதான் அவர்கள் சிறந்தவர்களாக ஆவதற்குரிய அடிப்படையாகும் என்பதை வற்புறுத்துவான்போலப் பேசுகிறான். வள்ளுவர் காலத்தில் தமிழருடைய நாகரிகமும் வாழ்வு முறையும் மிகச் சிறந்து வளர்ந்திருந்தன என்பதில் ஐயமில்லை. ஆனால், சமுதாய வாழ்க்கை, நகர வாழ்க்கை என்பவை ஒன்பதாம் நூற்றாண்டில் வளர்ந்திருப்பதுபோல் இரண்டாம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான், மெய்யுணர்தல், அவா அறுத்தல் முதலிய அதிகாரங்களை அறத்துப் பாலில், துறவறவியலில் வைத்தாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சிறிய கிராமங்களில், ஓரளவு வளர்ச்சி அடைந்த சிறு நகர்கள் என்பவைதாம் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும். மதுரை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் போன்ற நகர்கள் விரல் எண்ணிக்கையில் அடங்குவனவாகவே இருந்தன. அதிகப்படியான மக்கள் கூடி வாழும் பெருநகரம், அதனில் இயல்பாகத் தோன்றும் போட்டிச் சமுதாயம் (Competitive Society) என்பவற்றால் விளையும் ஊறுகளைப் பல்லவர் காலத்தை அடுத்து, |