28

ஆனால்     சாலியும்,    அன்னக்    குஞ்சும்    உண்பதற்காக
அவ்வெருமைகள்   இப்படிப்   பாலைத்   தரவில்லை.   எங்கேயோ
இருக்கின்ற கன்றை நினைத்தால் சுரந்த பால்  எருமையோடு எவ்விதத்
தொடர்பும் இல்லாத நெல்லுக்கும் அன்னக் குஞ்சுக்கும்  பயன்படுகிறது
என்று    கவிஞன்    பாடுவது    வெறும்   கற்பனையாக   மட்டும்
தோன்றவில்லை.

சமுதாயத்தில்   மேட்டுக்   குடியினராகிய  பெருவணிகர்,  பெருந்
தொழிலதிபர்    என்பவர்கள்    ஒரு    வணிகத்    தொழிலையோ
தொழிற்சாலையையோ   தொடங்கி  நடத்துகிறார்கள்  என்றால், அது
அவர்களும்    அவர்கள்    குடும்பத்தாரும்   அவர்கள்   மக்களும்
பயனடைய வேண்டும் என்ற கருத்தினாலேயே யாம்.

பெரு     வணிகம் என்பது  சில நூறு பேருக்கும், பெருந்தொழில்
என்பது  சில  ஆயிரம்   பேருக்கும் வாழ்வளிப்பதாக அமைகின்றதை
இன்றும் காண்கிறோம்.

இப்பெருமக்கள்   தம்   குடும்பம்,  உறவினர்  என்பவர்  வாழ்வு
கருதித்தான்   தொழிலைத்  தொடங்குகிறார்கள்.  ஆனால்,  அதனால்
பயனடையும்  ஆயிரக்கணக்கானவர்   தொழில் முதல்வருடன் எவ்வித
தொடர்பும் உடையவர் அல்லர்.

அதேபோலச் சாலியும், அன்னக்  குஞ்சும்  எருமையுடன் எவ்விதத்
தொடர்பும் பெற்றிராவிடினும் அதன் பயனை அனுபவிக்கின்றன.

வளமுடைய  பெருங்குடி  மக்கள், மேலும்,  மேலும்  தம் தொழில்
முறையைப்  பெருக்குவதன்  மூலம் பலருக்கு  வாழ்வளிக்க வேண்டும்
என்ற  கருத்தும்  கம்பனுடைய  இவ்விரு  பாடல்களிலும்  அமைந்து
கிடக்கின்றது    என்னலாம்.    இவ்வாறு    பாடுவதை   இலக்கியத்
திறனாய்வாளர் குறிப்பு (Suggestion) என்று கூறுவர்.

மேலை   நாடுகளில்  வாஷிங்டன், நியூயார்க், இலண்டன் போன்ற
நகரங்களில்   குற்றங்கள்  பெருகுவதற்கான  காரணங்களை  ஆய்ந்த
உளவியலார்    ‘வறுமைக்   கோட்டிற்குக்’கீழ்   உள்ள   சிறுவர்கள்,
இளைஞர்கள்      ஆகியோர்      பொழுது      போக்குவதற்கும்,
விளையாடுவதற்கும்,   அறிவு   வளர்க்கும்   கல்வியைப்  பெருக்கிக்
கொள்வதற்கும்  வாய்ப்பும்,  வசதியும்  இல்லாக்  காரணங்களாலேயே
தம்முள்    சண்டை   இடுதல்,   சிறுசிறு   குற்றங்கள்   இழைத்தல்
முதலியவற்றில் ஈடுபடுகின்றனர் என்று கண்டு கூறியுள்ளனர்.

ஆகவே,  நகர  அமைப்பில்  சிறார்கள்,   குழந்தைகள்,  மகளிர்,
இளைஞர்கள் - வாழ்வை வளர்த்துக்கொள்ளும் பணியில் ஈடு