முடிவுகள் எனப் பல்வேறு அம்சங்களில் இந்நூல்கள் மாறுபட்டு அமைந்துள்ளன. வான்மீகியால் சொல்லப்பெற்ற இராமசரிதையைத் தமிழில் தந்து, வான்மீகியின் புகழையும், இராமன் புகழையும் தமிழ் மக்களிடையே பரப்புவதைத் தன் நோக்கமாகக் கம்பராமாயணம் காட்டுகிறது. புகழ், செல்வன் முதலான இம்மைப் பயன்களையும், புண்ணியம், முக்தி போன்ற மறுமைப் பயன்களையும் தரவல்லது இராமாயணக் கதை மட்டுமே என்பதால் இதனை இயற்றியதாக ரங்கநாத ராமாயணம் கூறுகிறது. இனி, கவிஞரின் தந்தையாராகிய விடலராஜு என்பவர் தம் பெயரும், புகழும் என்றும் நின்று நிலவுமாறு இராமாயணத்தைத் தம் பெயரில் படைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் புத்தராஜு இதனைப்படைத்தார் என்னும் குறிப்பும் காப்பியத்தில் காணப்பெறுகிறது. இராம சரிதையைக் கேட்போர் யாவரே முக்தியடையாமல் இருக்க இயலும்? ஆதலால், தாம் இராமாயணம் இயற்றியதாகப் பாஸ்கர ராமாயண ஆசிரியர் கூறுகிறார். தெலுகு மொழியின் முதல் பெண் காப்பியக் கவிஞராகிய ஆதுகூரி மொல்ல, மறுமைப் பயனாகிய முக்தியை அடையும் நோக்குடன் மொல்ல இராமாயணத்தைப் படைத்ததாகக் கூறுகிறார். மேலும், இவர் தாமே இக்காப்பியத்தைப் படைக்க முனையவில்லை என்றும், ஸ்ரீராமரே தம் கதையைக் கூறி எழுதுமாறு கட்டளையிடத் தாம் எழுதியதாகவும் கூறுகிறார். “செப்புமனி ராமச்சந்துருடு செப்பிஞ்சின பலுகுமீத செப்பெத நேநெல்லப்புடு இகபர சாதன இப்புண்ய சரித்ர.....” என்னும் கவிஞரின் கூற்றால் இதனையுணரலாம். மேலும், வான்மீகியின் ராமாயணம் இருக்கவும், தாம் தெலுங்கில் ஓர் இராமாயணம் எழுதக் கருதியதன் நோக்கத்தைப் பின்வருமாறு விளக்குகிறார். பொருளும், சுவையும் உணர இயலாதவாறு வடமொழிக் காப்பியம் அமைந்துள்ளதால், பொதுமக்கள் அதனைப் படித்து இன்புற இயலவில்லை. வடமொழி இராமாயணம் படிப்பது செவிடன் காதில் சங்கு ஊதியது போலவும், செவிடும், ஊமையும் தம்முள் உரையாடிக் கொள்வது போலவும் இருக்கும். எனவே, சாதாரண தெலுகு மக்கள் படித்து இன்புறும் வண்ணம் எளிய சொற்களால், தெலுகு, |