இவ்வேறுபாடு இனிது புலனாகும். பக்தி இயக்கத்தின் பண்பாட்டு விளைச்சலாக இடைக்கால இலக்கியங்கள் தமிழில் பெருகிய காலத்தே தலைமுறை மாற மாறக் கம்பனைக் கற்றவர்களும் பெயர்த்தெழுதியவர்களும் தத்தம் அநுபவம், ஆர்வம், சார்பு போன்றவற்றின் விளைவாக நம்மாழ்வார், கலைமகள், அயன், அரன், விநாயகர் போன்ற பிற கடவுளர் பற்றியும், இராமன், சீதை, அனுமன் போன்ற இராமாயணப் பாத்திரங்கள் பற்றியும் வாழ்த்துப் பாடல்களைக் கம்பன் கவியெனவே தோன்றுமாறு யாத்து நூலின் பாயிரப் பகுதியிலே சேர்த்திருக்கலாம் எனவும் தோன்றுகிறது. இவற்றைக் கம்பன் கழகப் பதிப்பு மிகைப்பாடல்களாகக் காட்டுகிறது. தெலுகு இராமாயணங்கள் கி. பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்த் தோன்றியவை. ஒப்பாய்வுக்கு மேற்கொள்ளப்பெற்ற மூன்று இராமாயண நூல்களும் கோதாவரி, கிருஷ்ணாவின் சமவெளிப் பகுதகளில் இயற்றப்பெற்றவை. தமிழ்ச் சோழ அரச குடும்பத்தோடு பல நூற்றாண்டுகளாகப் பல வழிகளில் தொடர்புடையவை இப்பகுதிகள் என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. பக்தி இலக்கிய மரபு இப்பகுதிகளின் வழியாக வடபுல இலக்கியங்கட்கு எட்டியது. எனவே, சைவ, வைணவ, புராண மரபுகளுக்கு உட்பட்ட பல்வேறு கடவுளர்களின் வாழ்த்தைத் தெலுகு இராமாயணக் கவிஞர்களே இயற்றியுள்ளனர். ஆதலின் நூலின் பகுதியாகவ இவை அமைந்துள்ளன எனக் கொள்ள நேர்கிறது. விமலசூரியின் பௌம சரிதமாகிய ஜைன ராமாயணத்தைப் பின்பற்றி எழுந்த கன்னட பம்ப ராமாயணம் அருகக் கடவுள் வாழ்த்தை மட்டும் பெற்றுள்ளது. பிற கடவுளர் வாழ்த்து காணப் பெறவில்லை. இதற்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியது தொரவெ இராமாயணம். பக்தி இலக்கியப் பண்பாடு மேல்தட்டு மக்களோடு அமையாமல் சாதாரண, கல்வியறிவு முழுமைபெறும் வாய்ப்பற்ற பொதுமக்களிடையே சமயச் சொற்பொழிவுகள் கூட்டு வழிபாடு (பஜனை) என்னும் வடிவில் பரவியிருந்த காலத்தே இது தோன்றியது. எனவே, இதன் வாழ்த்துப் பகுதியில் மும்மூர்த்திகள், தேவகணங்கள், விநாயகர், சரஸ்வதி முதலாய தெய்வங்கள், வான்மீகி முதலான முந்தைய கவிஞர்கள், சான்றோர்கள், சமயத் தலைவர்கள் எனப்பல வேறுபட்ட தலைமைகளைத் தொழும் பன்முக வாழ்த்தினைத் தொரவெ இராமாயணத்தில் காண்கிறோம். மலையாள இராமாயணங்களும் இதே காலகட்டத்திற்கு உரியவையாதலின் மேற்காட்டியவாறே பன்முக வாழ்த்தினைக் கொண்டுள்ளன. எழுத்தச்சன் தமக்குக் கல்வி பயிற்றிய ஆசிரி |