யர்க்கும் வாழ்த்துப் பாடலை அமைத்துள்ளார். மலையாளக் கவிஞர் இருவருமே அந்தணர்களுக்குத் தனியாக வாழ்த்துப் பாடியுள்ளனர். இருவரும் அந்தணர் அல்லாத குலத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தன்னம்பிக்கை மிகுந்த, செயற்பாட்டுத் தன்மை கொண்ட மக்களியக்கமாகத் தொடங்கிய பக்தி இயக்கம், பின்னர் மெதுவாக இலக்கிய இயக்கமாக, தத்துவ இயக்கமாக மாறியது. மொகலாயர் ஆட்சித் தொடக்கத்தில் மீண்டும் பொதுமக்களிடையே பக்தி இயக்கம் சமயப் பிரச்சார, பஜனை இயக்கமாக மாறியபோது தன்னம்பிக்கையின் தரம் குறைந்து பௌராணிக வழிப்பட்ட ஒரு வழிபாட்டு இயக்கமாக மாறிவிட்டது. ஏறக்குறைய இத்தகைய சூழலில்தான், இந்தியாவின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் பக்தி இயக்கம் ஒரிசா, வங்காளம் ஆகிய பகுதிகளின் வழியாகப் பரவியது. இத்தகைய வழிபாட்டு இயக்கத்தின் பொது மக்களின் இலக்கியப் பிரதிநிதியாகத் துளசிதாசர் போன்றோர் தோன்றினர். எனவேதான், துளசிதாசரின் வாழ்த்துப்பகுதி 43 ஈரடிப் பாடல்களைக் (தோகா) கொண்டு மிக நீண்டு அமைந்திருக்கக் காண்கிறோம். கம்பன் பரம்பொருளை வணங்குகிறான்; வணக்கத்திற்குரிய காரணம் வெளிப்படையாகக் கூறப்பெறவில்லை. தெலுகு, கன்னட, மலையாள, இந்திமொழி இராமாயணக் கவிஞர்கள் தத்தம் காப்பியம் இனிது நிறைவேற வேண்டுமென்று வேண்டுகின்றனர். துளசிதாசர் இதற்கும் மேலாக இராமனின் புகழ், பரதன் முதலானோரின் திவ்ய குணங்கள், ஆதிகவி முதலானோரின் கீர்த்தி உலகமெங்கும் பரவ வேண்டும் என்றும் வேண்டுகிறார். வரும்பொருள் உரைத்தல் வான்மீகியின் பாலகாண்டத்தின் முதல் நான்கு சருக்கங்கள் வருபொருள் உரைக்கும் பகுதியாக அமைகின்றன. தாம் படைக்க விரும்பும் தலைவன் எத்தகைய பண்பு நலன்களை உடையவன் என்று கூறுமுகமாக நாரதர்-வான்மீகி உரையாடல் அமைகிறது. வான்மீகி நாரதரைப் பார்த்துக் கேட்கும் அறியா வினா சிந்திக்கத்தக்கது. இந்த உலகத்தில் இப்போது இருப்பவர்களில் நற்பண்புகளை உடையவனாக இருப்பவன் எவன்? வீரியமுடையவனாகவும், அறங்களை அறிந்தவானாகவும், நன்றியுள்ளவனாகவும், எப்போதும் உண்மையே பேசுபவனாகவும், விரதத்தில் உறுதியுடையவனாகவும் இருப்பவன் எவன்? (1. 1-2) |