நல்லொழுக்கமும், எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளமும், பல்கலை அறிவும், பல்வகையாற்றலும் எப்போதும் அன்பொழுகும் இன்முகமும் உரையவன் எவன்? (1. 1-3) தைரியமுடையவனும், கோபத்தைத் தன்வசப்படுத்தினவனும் ஒளியுமிழும், உடலையுடையவனும், அழுக்காறு அற்றவனும், போரில் உருத்தெழுந்தபோது தேவர்களாலும் அஞ்சத் தக்கவனும் எவன்? (1. 1-4) இதனை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், இத்தகைய ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை என்னுள்ளே அடங்காது மிகுந்து எழுகிறது. இத்தகைய மானுடனை அறியும் தகுதி தங்களுக்கே உண்டென அறிவேன். (1. 1-5) வான்மீகியின் ஆசையின் ஆழத்தை உணர்ந்த நாரதர் பெரிதும் மகிழ்ந்து, “முனிவரே உம்மாலே கூறப்பட்ட நற்குணங்கள் ஒருவரிடத்தேயே கிடைப்பதற்கரியன. ஆலோசிக்குமிடத்து, இக்குவாகு மரபில் தோன்றி ஸ்ரீராமர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர்தான் இவ் எல்லாப் பண்புகளையும் ஒருங்கே உடையவர்” என்று கூறி இராமகாதையைச் சுருங்க உரைக்கிறார். வான்மீகி தாம் கற்பித்துக் கொண்ட நற்பண்புகளும், நல்லொழுக்கங்களும் உடைய மானுடனாக இராமன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் இருப்பது அறிந்து, அவன் வாழ்க்கைக் கூறுகளை நாரதர் கூறக்கேட்டு அவற்றை அடிப்படையாகக் கொண்டு தம் காப்பியத்தை இயற்றினார். மானுட வாழ்க்கையில் வான்மீகி காண விரும்பிய குறிக்கோட் பண்புகள், அவற்றைத் தாங்கிய ஒருவனை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் வான்மீகியின் ஆழமான ஆசை இந்த இருவகை அம்சங்களும் கம்பன் காப்பியத்தில் இடையறாது இழையோடக் காண்கிறோம். தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த இராமாயணங்களும், விமல சூரியின் பௌம சரிதம், சங்கதாசரின் வாசுதேவ ஹிண்டி, இரவிசேனரின் பத்ம புராணம் ஆகிய ஜைன ராமாயணங்களும் வான்மீகியைப் பின்பற்றி எழுதப்பெற்றன அல்ல. கதையின் அடிச்சட்டகம் வான்மீகியின் காப்பியத்தோடு ஒத்திருப்பினும், அவதாரக் கோட்பாட்டை இவை ஏற்காமல், இராமனை ஒரு குறிக்கோள் மனிதனாகத் தத்தம் மதக்கோட்பாட்டிற்கேற்ப படைத்துக் காட்டுகின்றன. கதைகள், பாத்திரப் பெயர்கள், பாத்திரப் பிறப்புகள், போர்முடிபுகள் எனப் பல கூறுகளில் இவை வான்மீகத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட பாடுபொருளை உடையனவாய் விளங்குகின்றன. |