காசில் கொற்றத்து இராமன் கதையினை, தொடை நிரம்பிய தோமறு மாக்கதையினை வான்மீகியின் உரையின்படி தமிழ்ப் பாவினால் தான் உணர்த்துவதாகத் தன் காப்பியப் பொருள் குறித்துக் கம்பன் கூறுகிறான். முன்னரே வான்மீகியால் உரைக்கப் பட்டிருந்தலாலும் நாடறிந்த கதையாதலாலும் கம்பன் இதனை விவரித்துரைக்கவில்லைபோலும். தெலுகு இராமாயணக் கவிஞர்களும், கன்னட இராமாயணக் கவிஞர் குமார வான்மீகியும், மலையாள இராமாயணக் கவிஞர் கன்னச பணிக்கரும் வான்மீகி உரைத்த இராமாயணத்தைக் கூறுவதாகக் கூறுகின்றனர். எனினும் இராமனை அவதார நாயகனகக் கருதியே இவர்கள் தம் காப்பியத்தைப் படைத்துள்ளனர். தொரவையில் எழுந்தருளியுள்ள நரகரியை, விஷ்ணுவைப் பாடுவதாகக் குமார வான்மீகி விதந்து கூறுகிறார். பம்ப ராமாயண ஆசிரியர் வான்மீகியைப் பின்பற்றவில்லை. விமல சூரியின் பௌம சரிதத்தை ஒட்டிப் படைப்பதால் இராமனென்னும் புருடோத்தமனின் கதையைக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். இராமசர்மாவின் அத்யாத்ம ராமாயணத்தைப் பின்பற்றித் தாம் காப்பியம் படைப்பதாக எழுத்தச்சன் வெளிப்படையாகக் கூறாவிடினும், இராமன் என்னும் அவதார புருடனின் கதை ஆன்மீக நலத்திற்கு உகந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டு தம் காப்பியத்தைப் படைத்துள்ளார். பிரம்மத்தின் அவதாரமாக இராமனும், பிரம்ம சக்தியின் அவதாரமாகச் சீதையும் தோன்றி தர்மத்தை நிலை நாட்டிய அவதாரப் புருடர்களின் கதையைக் கூறுவதாகத் துளசிதாசர் கூறுகிறார். இவருடைய காப்பியம் இராமனைத் திருமாலின் அவதாரமாகவும் காட்டுகிறது; சாதாரண மானுடனாகவும் காட்டுகிறது. இவ்வாறு துளசியின் பாடுபொருள் பல பரிமாணங்களை உடையதாகக் காணப்படுகிறது. அவையடக்கம் வான்மீகியின் காப்பியத்தில் அவையடக்கப் பாடல் காணப்பெறவில்லை. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்த் தோன்றிய பௌத்த, ஜைன இராமாயணங்களில் இப்பகுதி அமைந்திருக்கக் காண்கிலோம். கம்ப ராமாயணத்தில் அவையடக்கமாக ஆறு பாடல்கள் அமைந்துள்ளன. |