பாற்கடலின் கரையில் நிற்கும் பூனையொன்று அக்கடல் முழுவதையும் தன் நாவால் நக்கியே குடித்து முடிக்க ஆசைப்பட்டதைப்போல, அறம் வழுவாத வெற்றி வீரனான இராமபிரானின் திருக்கதையை நான் ஆசை ஒன்றினையே துணையாகக் கொண்டு சொல்லலுற்றேன். ஆசையின் உந்துதலால் இதனைப் பாடலுற்றேனே யன்றி ஆற்றல் காரணமாக அன்று. இச்சிறந்த கதையினைமுன்னரே செம்மையாகச் செய்து முடித்த வான்மீகியின் பெரும்புகழ் நின்று நிலவும் இந்த நாட்டில் பொருளாழமற்ற புன்சொற்களால் இதனைக் கூற முனைந்த என்னை என்சொல்வது? உலகோர் என்னைப் புன்கவி என்று இகழும் தீச்சொல் எனக்கு உண்டாகவும் இதனை நான் பாடவந்த காரணம் யாதெனில், தெய்வ மாக்கவியாகிய வான்மீகியின் பெருமையை உலகறியச் செய்வதற்காகத் தான் என்க. (நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்றாற் போல) துறைதோறும் எழுந்த பல்வேறு பனுவல்களையும் பழுதற உணர்ந்த புலவர் பெருமக்கள் செவியில் என் புன்கவிகள் சென்று தைப்பது, நல்லிசை விரும்பி நயந்திருக்கும் அசுணத்தின் செவியில் எதிர்பாராது பறையொலி வீழ்ந்து பதைக்கச் செய்வதோடொக்கும். முத்தமிழின் சிறப்புகளையெல்லாம் நுணுகி ஆராயும் இயல்புடைய உத்தமக் கவிஞர்கட்கு ஒரு விண்ணப்பம், செய்கிறேன்; அறிவு பிறழ்ந்தவர்கள் கூறுவதையும், அறிவற்றவர்கள் கூறுவதையும், பக்தர்கள் கூறுவதையும் திறனாய்வுக்கு உட்படுத்தலாமா? இளம்பிள்ளைகள் ‘இது அறை, இது மண்டபம்’ எனத் தரையிற் கீறி வீடு கட்டி விளையாடுவதைக் காண நேரும் கட்டடக்கலை நிபுணர்கள் அப்பிள்ளைகளின் முதிர்ச்சியற்ற முயற்சியைக் கண்ட்டிப்பதுண்டா? சற்றும் மெய்ஞ்ஞானம் நிரம்பாத நான் இயற்றிய இந்நூலை முறையின் நூல் உணர்ந்த சான்றோர் படிக்க நேர்ந்தால் இதன் வெளிறு கண்டு என்னைக் கோபிப்பரோ? தெலுகு இராமாயணங்களுள் ரங்கநாத ராமாயணத்திலும், பாஸ்கர ராமாயணத்திலும் அவையடக்கம் எனத் தெளிவான பகுதி எதுவும் அமையவில்லை. மொல்ல ராமாயண ஆசிரியராகிய அம்மையார், ‘இராமர் எனக்குக் கூறியவாறே நான் இந்த |