58

எழுத்தச்சனின்  அத்யாத்ம  ராமாயணத்தில் அவையடக்கப்  பகுதி
அமையவில்லை.  தாம்   எந்தக்  காப்பியத்தின்  அடிப்படையில்  தம்
நூலை   இயற்றியுள்ளார்   என்று    கூறவில்லை.   தாம்  அத்யாத்ம
ராமாயணம் எழுதுவதாக மட்டும் குறிப்பிடுகிறார்.

துளசிதாசரின் அவையடக்கம் பின்வறுமாறு அமைந்துள்ளது.

இக்காப்பியத்தை  இயற்றுவதில்  பேராசையுடையேன்;  எனினும்,
அதற்குரிய ஆற்றல் ஒரு சிறிதும் அற்றவன். (1 : 8)

நான்  ஒரு கவிஞனுமல்லன்; பேச்சுக் கலையில் வல்லவனுமல்லன்;
கலைகள்  எதுவும்   அறியாத   பேதை;  யாப்பிலக்கண  அறிவோ,
அணியிலக்கணப்  புலமையோ  இல்லாதவன்; ஒரு சிறந்த நூலிற்குரிய
அழகுகளையோ, நூல் இயற்றும்போது ஏற்படும் குற்றங்களையோ ஒரு
சிறிதும் அறியாதவன்.

மக்களின் பழகுமொழியில்  இயற்றப்பட்டுள்ள என்னுடயை எளிய
இக்காப்பியம், இலக்கிய  அழகுகள்,  சுவைகள்  போன்ற  சிறப்புகள்
எவற்றையும் பெறாதது.

எனினும்,  இராமனின்  திருப்புகழைப்  பாடுகின்ற  காரணத்தால்,
நறியனவே நாடும்  கொங்குதேர்  வாழ்க்கை  அஞ்சிறைத் தும்பியின்
இயல்புடைய கல்வி  வல்ல  நல்லோர் இக் கப்பியத்தின் நிறைகளைக்
கண்டு  மகிழ்ந்து  போற்றுவர்; குறைகளை மறப்பர்; மன்னிப்பர். (1 :
9-4,5,6)

மேற்கண்ட   அவையடக்கச்     செய்திகளை    நோக்குமிடத்துப்
புலனாகும் கருத்துக்களாவன:

தன் நூலைப் படிக்கத்  தக்க அவையினரின்  கவனத்தைத் தம்பால்
ஈர்த்து  அதனைப் படிக்குமாறு தூண்டுதல்  இத்தகைய அவையடக்கப்
பாடல்களின்  நோக்கமாகக் காணப்படுகிறது. தொடக்கக் காலத்தில் ஓர்
உத்தியாகக் (Rhetorical technique) கவிஞனால்  பயன் படுத்தப்பெற்ற
ஒன்று கால ஓட்டத்தில் நூலின் இன்றியமையாத ஓர் உறுப்பாகவே சில
இலக்கிய  மரபுகளில்  நிலைத்து  விட்டிருக்கலாம்  எனக்  கொள்ளக்
கிடக்கிறது.

தாமே     ஆதிகவியானதாலோ,   தம்    காப்பியப்    பொருள்
வேறெவர்க்கும்   தெரியாமையாலோ,  தம்  காப்பியத்தைக்  கேட்கும்
அவையென   ஒன்று   இல்லாமையாலோ,   அன்றி   அவையடக்கம்
என்னுமோர்  இலக்கிய  மரபே  அவர்  காலத்தில்  இல்லாமையாலோ
வான்மீகி அவையடக்கம் கூறவில்லை எனக் கருதத் தோன்றுகிறது.