59

பௌத்த  நூல்கள்  வணக்கம்    கூறும்   மரபற்றன  வாதலாலும்,
ஜைனரின்  அருக  வணக்கமே  அவையடக்கமாகக் கருதப்படுவதாலும்,
இவற்றில் அவையடக்கப் பகுதிகள் இடம்பெறவில்லை எனலாம்.

அவையடக்கம்     பெற்றுள்ள   காப்பியங்கள்  எல்லாம்   ஒரே
தன்மையனவாய்க்   காணப்படுகின்றன.    தம்முடைய  தகுதியின்மை,
அவையோரின்   தகுதிப்  பெருமை  இரண்டையும்  உறழ்ந்து  கூறித்
தம்மைத்   தாழ்த்திக்   கொள்ளும்   உத்தி  ஒருவகையில்  அவ்வக்
கவிஞர்களின்    பெருமையைப்   புலப்படுத்துவனவாக   முடிவதைக்
காண்கிறோம்.   கவிஞனின்  கற்பனை  வளத்தை  அறிந்து  கொள்ள
உதவும் ஒரு கருவியாகவும் இப்பகுதி பயன்படுகிறது.

கம்பனின்  அவையடக்கம்  மூன்று   கூறுகளாக  அமைந்துள்ளது.
ஆற்றலால் அன்று, ஆசையால் பாடப்பெற்றது’ என்னும் கூற்று பொது
வாசகர்களை    நோக்கியது.    நற்குணக்    கடலாகிய    அறத்தின்
மூர்த்தியின்பால்      தனக்கேற்பட்ட      அன்பின்     ஆழத்தை
வெளிப்படுத்துகிறது,  அடுத்து  வரும்  ஐந்து  பாடல்களில்  இரண்டு
வான்மீகம்  அறிந்த  வடமொழி  அறிஞர்களையும், எஞ்சிய  மூன்றும்
தமிழ்மொழிக்   கவிஞர்களையும்    நோக்கியனவாய்   அமைகின்றன.
வான்மீகத்தைப்   புகழ்ந்து  தன்னைத்   தாழ்த்தியுரைத்து  வடமொழி
அறிஞர்களின்   ஆதரவைப்  பெற  இரண்டு  பாடல்களைக்  கம்பன்
அமைக்கிறான்.  தமிழ்  இலக்கியத்தின்  உறுப்பாகத்   தம்  காப்பியம்
அமைய  இருப்பதால்,  முத்தமிழிலும்  வல்ல   தமிழ்ப்  புலவர்களின்
ஆதரவைப்   பெற  மூன்று  பாடல்களில்  தன்னுடைய  பணிவையும்
எளிமையையும் புலப்படுத்தி அவர்களுடைய  ஆதரவைத் தேடுகிறான்.
“Rhetoric” எனச்  சிறப்பித்துப்  பேசப்பெறும்  உரோமானிய மரபின்
பேச்சுக்    கலை,    புலமை    எதிர்ப்பைச்    (Pacifying    the
Resistance)          சாந்தப்படுத்தலும்,    புலமையாளர்களையும்,
பொதுமக்களையும்     தம்பால்      ஈர்த்தாலும்  (Entice     the
Audience) ஆகிய இரு கூறுகளை உடையது. இந்த இரு கூறுகளையும்
கம்பன் திறம்படப் பயன்படுத்தியுள்ளமையைக் காணலாம்.

தெலுகு  மொல்ல ராமாயணமும் மலையாள கன்னச ராமாயணமும்
இதே  உத்தியைச்  சுருக்கமாகப்  பயன்படுத்தியுள்ளன. துளசிதாசரின்
அவையடக்கப்  பகுதி மிக மிக விரிவாக அமைந்து, கவிஞன் தன்னை
மிகவும் எளியனாக, பக்தர்கள் இறைவனிடம் கொள்ளும் பணிவினைப்
போல,  மிகத்  தாழ்ந்து  இறைஞ்சும்  பாவனையில்  காணப்படுகிறது.
‘அடியேன்’   என்னும்   தமிழ்  வழக்கிற்கீடானதொரு  பணிவினைப்
பெற்றுள்ள   துளசிதாசரின்   அவையடக்கம்  அவர்காலத்தே  பக்தி
இயக்கம் வழிபாட்டியக்கமாக மாறிவிட்ட நிலையை விளக்குகிறது.