60

தொரவெ     இராமாயணத்தின்    அவையடக்கம்,    மேற்கண்ட
மரபிலிருந்து   முற்றிலும்   மாறிக்   காணப்படுகிறது.  இந்த  மாற்றம்
இருவகையாக   அமைகிறது.  மொத்தமுள்ள  நான்கு  அவையடக்கப்
பாடல்களில்  இரண்டு  பாலகாண்டத் தொடக்கத்தில் முதற்சந்தியிலும்,
ஏனைய  இரண்டும்  யுத்த காண்டத்தின் முடிவில் 55ஆம் சந்தியிலும்
அமைக்கப்    பட்டுள்ளன.    இந்த    மரபு   மாற்றம்   பாடல்கள்
அமைக்கப்பட்ட இடம் பற்றியது. அடுத்து, இராமாயணம் பாடத் தாமே
தகுதியானவர் என்றும், தம்மை விட்டால் வேறு யாருமில்லை என்றும்,
தாம் பாடியதை ஏற்றுக்கொள்ளாதவர் எவரும்  இல்லையென்றும், தாம்
யாரையும்   பார்த்துப்  படைக்காமல்  தாமே  படைத்தவர்  என்னும்
பெருமைக்குரியவர்  என்றும்,  தம்மைத்  தவிர  ஏனைய  கவிஞர்கள்
எல்லாம்  புலமைப்  பதர்கள்  என்றும்  கூறும்  தற்புகழ்ச்சிப் பாங்கு
அல்லது    தன்னம்பிக்கையேற்றம்    இந்தியக்   காப்பிய   உலகில்
காணப்படாத   புதுமையாக   உள்ளது.   இந்த  மாற்றம்  கவிஞனின்
புலமைச் செருக்குப் பற்றியதாக அமைகிறது.

நாட்டு நகர வருணனைகள்

வான்மீகி கோசல நாட்டைப் பற்றி ஐந்தாம் சருக்கத்தில் ஒரே ஒரு
சுலோகத்திலும்,    அயோத்தி   நகரைப்   பற்றி   ஐந்து,   ஆறாம்
சருக்கங்களில் 47 சுலோகங்களிலும் வருணிக்கிறார்.

சருக்கம் ஐந்து

பல்வேறு  வளங்களால்  நிறைந்த,  தன  தானியங்களை  மிகுதியாக
உடைய கோசலம்  எனப்  பெரும்புகழ்பெற்ற  நாடொன்று  சரயுவின்
கரையில் நிறுவப்பட்டது. (5 . 5)

அயோத்தியா   என்ற  உலகப்புகழ்பெற்ற   நகரம்   ஒன்று  அங்கு
இருந்தது.    அது     மானுடர்த்    தலைவனான     மனுவினால்
படைக்கப்பட்டது. பத்தும்  இரண்டும் ஆன யோசனைகள்  நீண்டது.
அப்பெரு நகரம்   திருமகளின்   இருப்பிடமாக   இருந்தது. மூன்று
யோசனை  அகலமானது.  நன்கு  வகுக்கப்பட்ட பெரிய சாலைகளை
உடையது.   உதிர்ந்த   மலர்களால்   நிரம்பி    எப்போதும்   நீர்
தெளிக்கப்பெற்ற  அரசுப்  பெருந்தெருவை  (இராச வீதி) உடையது.
(5,6,7,8)

பேரரசுகளைக்  காக்கும்   அரசனான    தசரதன்,   தேவருலகைத்
தேவேந்திரன்  ஆளுவதுபோல   அந்தப்   பட்டணத்தை  ஆண்டு
வந்தான். ( 5, 9 )