அந்நகரம் புறவாயிற் பெருங்கதவை உடையது. நன்கு அமைக்கப்பட்ட பெருந்தெருக்களில் வணிகர்களின் கடைகள் அந்நகரின் நடுப்பகுதியில் இருந்தன. பல்வேறு எந்திரங்களையும் ஆயுதங்களையும், சதக்னீ என்னும் பெயருடைய நூற்றுக்கணக்கான பீரங்கிகளையும் உடையதாக இருந்தன. பல்வகைச் சித்திர வேலைக்காரர்களாலும், அரசரைத் துதித்துப் பாடும் சூதகர், குலமுறை புகழ்ந்து துயில் எழுப்பும் மாகதர், பெண்களுக்கு நடனம் பயிற்றும் நடர்கள் போன்றோராலும் நிறைந்த நகரம்; திருமகள் நீங்காத மீயுயர் மாளிகைகளின் மீது கொடிகளையுடைய நகரம். மலர்வனங்கள், இன்பப் பூங்காக்கள் நிறைந்தது; ஒட்டியாணம் போன்ற மதில்களை உடையது; பெரிய ஆழமான அகழியையும், அரிதின் முயன்றாலும் வேற்றோரால் புக முடியாத கோட்டையினையும் உடையது. (5 : 10-12) குதிரைகள், யானைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கழுதைகள், கப்பம் கட்டுகின்ற சிற்றரசர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள வணிகர்கள் ஆகியோரின் கூட்டங்களால் நெருக்கப்பட்டுள்ள நகரம். பல்வகை இரத்தினங்களால் இழைத்துக் கட்டப்பட்ட, மலை போன்று உயர்ந்த, பல அடுக்குகளை உடைய மாட மாளிகைகளால் நிறைந்த நகரம்; இந்திரனின் அமராவதியைப்போல, சொக்கட்டான் கட்டம் போன்ற வியக்கத்தக்க வடிவில் அமைந்த நகரம்; விமானங்களுக்கு ஒப்பான மாட மாளிகைகள் நல்லிணக்கணங்கள் பொருந்திய சிறந்த மாதர் குழாங்களால் நிறைந்து காணப்பட்டன. (5 : 13-16) குற்றமற்ற சமநிலத்தே கட்டப் பெற்ற வீடுகளால் நெருக்கமாக அமைந்த நகரம்; செந்நெல் அரிசியால் நிறைந்தது; கருப்பஞ்சாறு போன்ற இனிய நீர் நிலைகளை உடையது. பேரிகை மிருதங்கம், வீணை, மத்தளம் முதலியவற்றால் எழுப்பப்படும் இன்னோசைகள் நீங்காத நகரம். உத்தமவிலக்கணத்தால் அமைந்து, தேவலோகத்தில் உள்ள குபேரன், இந்திரன், இமயன், வருணன் முதலிய எவருடைய நகருக்கும் இல்லாத சிறப்புகளை உடையதாய், கைபுனைந்து இயற்றாக் கவினுடைய பிரம்மாவின் பட்டணம்கூட இதன் சிறப்பிற்கும் அழகிற்கும் ஒவ்வாது என்று புகழப்பட்டதாய், |