63

சுத்தமற்றவன்    இல்லை;   வளமான   உடலில்லாதவன்   இல்லை;
பரிமளமில்லாதவனும் இல்லை. (6:10)

வயிறார   உண்ணாதவன்   இல்லை;   கொடுக்காதவன்  இல்லை;
தோள்வளையும்,  ஆரமும்  அணியாதவன் இல்லை; மேலும் கைவளை
இல்லாதவன் இல்லை; புலன்களை அடக்காதவனும் இல்லை. (6 : 11)

அயோத்தியில்     நாளும்  ஓமம்  செய்யாதவன் இல்லை; யாகம்
செய்யாதவன் இல்லை; அற்பனும் இல்லை;  திருடனும் இல்லை; வருண
ஒழுக்கங்கள்  தவிர்த்து,  சாதிமுறை  தவறித்  திருமணம் செய்பவனும்
இல்லை. (6:12)

பிராமணர்கள்   எப்போதும்  தங்கள்  கடமைகளைச்   செய்வதில்
ஆர்வமுடையவர்களாகவும்,    புலன்களைப்   பொறிவழிச்  செல்லாது
அடக்குபவர்களாகவும்,  கல்வியிலும்  கொடையிலும் ஈடுபடுதலைத் தம்
இயற்கையாக   உடையவர்களாகவும்,  கட்டுப்பாடு  உள்ளவர்களாகவும்
இருக்கின்றனர். (6:13)

அவனுடைய   ஆட்சிக்காலத்தில்   நாத்திகன்  என்று  ஒருவனும்
இல்லை;    பொய்பேசுபவன்   இல்லை;   பல்வேறு   சாத்திரங்களை
அறியாதவன்   இல்லை;   அழுக்காறு   உடையவன்  இல்லை;  சக்தி
யற்றவன் இல்லை; புலமையில்லாதவனும் இல்லை. (6:14)

இங்கு ஆறு வேதாங்கங்களை அறியாதவன் ஒருவனாவது இல்லை;
விரதமில்லாதவன்  இல்லை; ஆயிரக்கணக்காகக் கொடாதவன் இல்லை;
எளி வந்தவனும், தயக்க  மனத்தையுடையவனும், வருத்தமுடையவனும்,
பிணியில் வருந்துபவனும் இல்லை. ( :15)

அயோத்தியில்  திருமகள்   அருள்பெறாத   ஒரு  மனிதனையோ,
பெண்ணையோ    பார்க்க    முடியாது;   அழகற்றவனும்   இல்லை;
அரசனிடத்தில் பக்தி இல்லாதவன் இல்லை. (6:16)

கம்பராமாயணம் ஆற்றுப் படலம் (20), நாட்டுப் படலம் (61), நகரப்
படலம்  (75)  என்னும்  மூன்று  படலங்களில்  கோசல  நாட்டையும்
அயோத்தி  நகரையும் வருணிக்கிறது. நானில  வருணனைகள் ஆற்றுப்
படலத்திலும்,   மக்களின்    பொதுவாழ்க்கைச்   சிறப்புகள்  நாட்டுப்
படலத்திலும்,  நகரத்தின்  அமைப்பு, மதில், அகழி,  மாடமாளிகைகள்,
மாந்தரின்  ஆடல்  பாடல்கள்  போன்ற துய்ப்பு  நிலைகள், செல்வம்,
கொடை,  கல்வி,  வீரம்,  அன்பு, கற்பு போன்ற வாழ்வியற் பண்புகள்
ஆகியன நகரப் படலத்திலும் மிக விரிவாகக் கூறப்படுகின்றன.