என்று அயோத்தி நகரின் மேன்மைக்கும் சிறப்பிற்கும் இராமன் அயோத்தியில் பிறந்ததையும், ஆட்சி செய்ததையும் எதிரது போற்றலாகக் காரணமாக்குகிறான். துளசிதாசர் இத்தகைய வருணனையில் கருத்து செலுத்தவில்லை. தெலுகு, கன்னட, மலையாள இராமாயணங்கள் வான்மீகத்தை ஒட்டி நாட்டு வருணனைகளைச் சுருக்கமாகக் கூறுகின்றன. இராமனின் பிறப்பு வான்மீகம் பாயசப் பங்கீடு நெடுநாளாக மக்கட் பேறின்றி வருந்திய தசரதன் தன் குரு வசிஷ்டனின் அறிவுரைக்கேற்ப ரிஷ்ய சிருங்கரின் உதவியால் பரிமக யாகம் செய்கிறான். யாக முடிவில் தேவர்களால் தரப்பட்ட பாயசத்தைச் சுமந்தவாறே அக்கினியினின்றும் புறப்பட்ட பூதமொன்று தசரதனை நோக்கி, “இந்தப் பாயசத்தை உம் மனைவிகளுக்குக் கொடுங்கள்; எந்தப் பயன் கருதி இந்த யாகத்தைச் செய்கிறீரோ, அதன்பயன் இதனால் விளையும்” என்று கூறி வாழ்த்தி மறைந்தது. தசரதனும் பெரிதும் மகிழ்ந்தவனாய் அந்தப்புரம் அடைந்து, அப்பாயசத்தில் பாதியைக் கோசலைக்கும் மீதியில் பாதியைச் சுமித்திரைக்கும் கொடுத்தார்; மிகுந்து நின்றதில் பாதியைக் கைகேயிக்குக் கொடுத்தார். அமுதம் ஒத்த அந்தப் பாயசத்தில் மேலும் எஞ்சி நின்றதைச் சிறிது நேர யோசனைக்குப் பிறகு சுமித்திரைக்கு மட்டும் கொடுத்தார். இவ்வாறு தசரதன் தம் மனைவியர்க்கு அந்தப் பாயசத்தை வெவ்வேறு அளவில் கொடுத்தார்”. (1.16:29, 30,31) அவதாரப் பிறப்பு: யாகம் முடிந்து ஆறு ருதுக்கள் ஆனதும் விஷ்ணு பகவானுடைய பாதி அம்சமான மகா பாக்கியசாலியான, இக்க்ஷுவாகு மரபைக் களிப்பிக்கின்ற இராமராகிய, குழந்தையைக் கோசலை பெற்றாள்: (1. 18:8,11) சாட்சாத் விஷ்ணுவினுடைய நாலில் ஒரு அம்சமுள்ள பரதர் என்று பேருள்ள பராக்ரமமுடையவர் கைகேயினிடத்தில் பிறந்தார். விஷ்ணு பகவானுடைய அம்சத்தோடு கூடின வீரர்களான லட்சுமணர், சத்ருக்கனர் என்ற இரண்டு புதல்வர்களைச் சுமித்திரை பெற்றாள். (1:18:13,14) |