இராமன் பிறந்தான் என்று பிறப்பின் போதிருந்த கிரக நிலையை வான்மீகியின் மொழிப்படியே பாஸ்கர ராமாயணம் சுட்டுகிறது. (1. 156-167) தெலுகு மொல்ல ராமாயணத்தில் தசரதன் பாயசத்தை இரண்டு பாகமாக்கி அரசியருள் மூத்தோர் இருவர்க்கும் ஒவ்வொன்றைக் கொடுக்கிறான். அவர்கள் தத்தம் பாகத்தில் பாதியைச் சுமித்திரைக்கும் கொடுக்கின்றனர். (1:39) கன்னட பம்பராமாயணத்தில் தசரதனுக்கு மனைவியர் நால்வர். அவர்களுள் அபராஜிதை இராமனையும், சுமித்திரை இலக்குவனையும், கைகேயி பரதனையும், சுப்பிரபை சத்துருக்கனனையும் இயற்கையாகக் கருவுயிர்த்துப் பெறுகின்றனர். தொரவெ இராமாயணத்தின்படி, தசரதன் பாயசத்தை இரண்டு பாகமாக்கி அதில் ஒன்றை மீண்டும் இரண்டு பாகமாக்கி அந்த இரண்டையும் சுமித்திரைக்கும், எஞ்சிய பாகத்தை இரண்டாக்கிக் கோசலைக்கு ஒன்றும், கைகேயிக்கு ஒன்றும் கொடுத்தான். இவ்வாறு பாயசத்தை நான்கு கூறாக்கி மூன்று அரசியர்க்குக் கொடுத்தான். சங்கதாசரின் வாசுதேவ ஹிண்டியின்படி, கோசலை, கைகேயி, சுமித்ரா என்ற மூன்று மனைவியருள் கோசலைக்கு இராமனும், சுமித்திரைக்கு இலட்சுமணனும், கைகேயிக்குப் பரத, சத்ருக்கனர்களும் பிறந்தனர்.2 குணபத்ரரின் உத்தர புராணப்படி வாராணாசியை (காசி) ஆண்டு வந்த தசரதனின் அரசியான சுபலாவுக்கு இராமனும், கைகேயிக்குச் சக்கரச் சின்னத்தோடு கூடிய இலட்சுமணனும் பிறக்கின்றனர். தசரதன் அயோத்திக்குச் சென்ற பிறகு, வேறொரு மனைவியின் மூலம் பரத-சத்ருக்கனர் பிறக்கின்றனர்.3 துன் ஹூவாங் (Tun-huang) என்னும் திபேத்திய இராமாயணத்தில் திருமால் ரமணனாகவும், திருமாலின் மகன் லக்சேனாவாகவும் தசரதனுக்குப் பிறக்கிறார்கள்.4
2. U.P.Shah, ‘Ramayana in Jaina Tradition : Asian Variations in Ramayana, ed. K.R. Srinivasa Iyengar New Delhi; Sahitya Akademi. (1983) PP. 63.64 3. U.P. Shah, P.71 4. J.W. De jong ‘Th Story of Rama in Tibet, ‘Asian Variations in Ramayana P. 164 |