72

இந்த வேறுபாடு சமய, தத்துவப் பார்வைகளால் விளைந்தவையாகக்
காணப்படுகின்றன.  பௌத்தமும்  ஜைனமும்  இறைக்  கோட்பாட்டை
ஏற்றுக்      கொள்ளாதனவாதலின்     இராமன்     முதலானோரை
அவதாரங்களாகப்   படைக்கவில்லை.   எனினும்,  இராம  காதையில்
பொதிந்துள்ள  வாழ்க்கை  நிகழ்ச்சிகளை  பலவும்  உலக  நடப்பைக்
காட்டுவனவாகவும்,     கோட்பாடுகளைக்,     குறிப்பாக    வினைக்
கோட்பாடுகளை  விளக்கப்  பயன்படுவனவாகவும்   வழக்கில்  மக்கள்
எல்லோராலும்  அறியப்பட்ட கதையாகவும்  இருத்தலின், தத்தம் சமய
உண்மைகளை  விளக்க  இக்கதையை   இச்சமயங்கள்  பயன்படுத்திக்
கொண்டன எனக் கருதத் தோன்றுகிறது.

இனி,  அவதாரம் என்று கூறும் நூல்களும் அவதாரத் தன்மையைக்
கூறுமிடத்துத்   தம்முள்   வேறுபடுகின்றன.   அதாவது,  வான்மீகம்,
மகாபாரதம்,   அரிவம்சம்,   விஷ்ணுபுராணம்,  வாயுபுராணம்,  துளசி
ராமாயணம்    போன்றன,   திருமாலே   நால்வராகப்   பிறப்பதாகக்
கூறுகின்றன.  ஆனால்,  வான்மீகியைப்  பின்பற்றுவதாகக்  கூறுகின்ற
கம்பராமாயணமும்  பாஸ்கர ராமாயணமும், அத்யாத்ம  ராமாயணமும்,
திருமால்  இராமனாகவும்,  சங்கு,  சக்கரம், ஆதிசேடன் முதலானோர்
பரத,  சத்துருக்கன்,  லட்சுமணர்களாகவும்  பிறப்பதாகக்  கூறுகின்றன.
திபேத்திய   ராமாயணமோ,   திருமால்   ரமணனாகவும்   (இராமன்)
திருமாலின் மகன் லக்சேனா (லட்சுமணன்) ஆகவும்  பிறந்தனர் என்று
கூறுகிறது.  துன்  ஹூவாங்  குறிப்பிடும் திருமாலின் மகன் யாரென்று
தெரியவில்லை.

இராமாயணக்  கதை தழுவிய காவியங்கள், புராணங்கள், பதிப்புகள்
போன்றவற்றை  ஆராய்வதில்  தலைசிறந்த  அறிஞராகிய  மறைத்திரு
டாக்டர்  கமில்  பல்கி   (Rev.  Dr.  Camille  Bulcke) அவர்களின்
கருத்துப்படி,   கி.   பி.   பதினான்காம்  நூற்றாண்டளவில்  சாகல்ய
மல்லரால்  இயற்றப்பெற்ற  உதார  ராகவ என்னும் நூலில்தான் முதன்
முதலாகச்   சங்கு   சக்கர   அவதாரக்    கருத்து   காணப்படுகிறது.
அதன்பின்னர்   வந்த   அத்யாத்ம   ராமாயணம்,  பத்ம   புராணம்
போன்றன   இக்கருத்தைப்   பின்பற்றித்   திருமால்  இராமனாகவும்,
ஏனையோர்    அவனது    அம்சங்களாகவும்    பிறந்தனர்   என்று
கூறுகின்றன.11  திபேத்திய ராமாயணமும், அத்யாத்ம  ராமாயணத்தைப்
பின்பற்றித்  திருமால்  தானும்  தன்  மகனும்  இராமலக்குமணர்களாக
அவதரித்தனர்  என்று  கூறுகிறது.  இனி  அத்யாத்ம  ராமாயணத்தை
மிகுதியாகப்  பின்பற்றி  எழுந்த  துளசி  ராமாயணமும்  சங்கு  சக்கர
அவதாரத்தை    ஏற்றுக்கொள்ளாமல்   வான்மீகி    கூறுவது  போல்
திருமாலவதாரமாகவே காட்டுவது ஏன் என்று விளங்கவில்லை.


11. Rama Katha, P. 7. quoted in Shankar Raj Naidu. P.118