லாம்; பரதன் மூத்தவனாகப் பிறந்த காரணத்தினால் கைகேயியை இரண்டாம் மனைவியாக மற்ற இராமாயண நூல்கள் காட்டலாயின என்றும் கருதத் தோன்றுகிறது. பௌத்த, ஜைன இராமாயணங்கள் நான்கு மக்களையும் பெற்ற அரசியர்களை வெவ்வேறாக உரைக்கின்றன. தசரத ஜாதகம் மூத்தவளுக்கு இராமனும், இலக்குவனும் பிறந்ததாகக் கூறுகிறது. விமல சூரியின் பௌம சரிதம் நான்காம் மனைவியாகிய சுப்பிரபைக்குச் சத்ருக்கனன் பிறந்தான் என்று கூறுகிறது. பம்ப ராமாயணம் இராமனின் தாய் அபராஜிதெ என்றும், சத்ருக்கனன் தாய் சுப்பிரபை என்றும் கூறுகிறது. வாசுதேவ ஹிண்டி, கைகேயிக்குப் பரத, சத்ருக்கனர் பிறந்தனர் என்றும், உத்தரபுராணம் சுபாலாவுக்கு இராமனும், கைகேயிக்கு இலட்சுமணனும், மூன்றாம் மனைவிக்குப் பரத, சத்ருக்கனரும் பிறந்தனர் என்றும் கூறுகின்றன. இந்து சமயத்தைச் சார்ந்த நூல்கள் வழக்கில் உள்ளவாறு கூறுகின்றன. கிரக நிலைகள் இராமன் முதலானோர் பிறந்த போதிருந்த கிரக நிலைகளைப் பற்றி வான்மீகி இராமாயணம் தெளிவாகக் கூறுகிறது. “சித்திரை மாதம் வளர்பிறையில் நவமி திதியில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்கும்போது கர்க்கடக லக்கினத்தில் இராமன் பிறந்தான்” என்று வான்மீகி கூறுகிறார். (1, 18:9,10) கம்பராமாயணமும் (1,5:101,104-106) தெலுகு பாஸ்கர ராமாயணமும் (1,167) துளசி ராமாயணமும் (190/1-2) இவ்வாறே நால்வர் பிறப்புக்கும் உரிய கிரக நிலைகளைச் சுட்டுகின்றன. எனினும், சில வான்மீகி இராமாயணப் பதிப்புகளில் இது பற்றிய செய்திகள் காணப்பெறவில்லை.17 வான்மீகி இராமாயணம் இருவகை வழக்குகளை உடையதாகக் காணப்படுகிறது. முதலாவது வடபுல வழக்கு (Northern Recension) இரண்டாவது தென்புல வழக்கு (Southern Recension) இந்த இருவகையில் தென்புல வழக்கு வான்மீகி இராமாயணத்தில் மட்டுமே இவ்வாறு கிரக நிலைகள் சுட்டப்பெறுகின்றன என்றும் வடபுல வழக்கு வான்மீக ஏடுகளில் இச் செய்திகள் காணப் பெறவில்லை என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.18
17. The Vanmiki Ramayana : Critical edition Vol I Balakanda, ed.G.H. Bhatt. (Baroda : M.S. University Oriental Institute. 1959) 18. U.P. Shah, “Ramayana Manuscripts of different versions” in The Ramayana Tradition in Asia ed. V. Raghavan (New Delhi: Sahitya Akademi, 1980, rpt 1989) P. 102 |