வராகமிஹிரர் தோன்றிப் புகழ்பெற்ற பண்பாட்டில் கிரக நிலைகள் சுட்டப்பெறவில்லை என்பதும், கோளாறு பதிகம் பாடிய பண்பாட்டில் வழங்கும் ஏடுகளில் இவை சுட்டப்பெறுகின்றன அல்லது இடைச் செறுகலாகப் புகுத்தப்பெற்றன என்பதும் வியப்பூட்டுவனவாக உள்ளன. எனவே, இக்கருத்து மேலும் சிந்திக்கத்தக்கதாக அமைகிறது. தாடகை வதம் வான்மீகியில் தாடகைவனம் செல்லும் வழியில் தாடகையின் சாப வரலாற்றை அதாவது அகத்தியரால் சபிக்கப்பட்டு அரக்கியான வரலாற்றினை விசுவாமித்திரர் இராமலக்குவர்களுக்குக் கூறுகிறார். (இராவணனைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.) முனிவர்கள் யாகத்தை அழிக்கும் தாடகையின் கொடுமைகளை எடுத்துக் கூறிப் பெண்ணாயினும் ‘இவளைக் கொன்று தர்மத்தைக் காப்பாற்று’ என விசுவாமித்திரன் கூறியதும், இராமன், “அயோத்தியில் தங்களுடன் வரத் தொடங்கும்போது தங்களுடைய சொல்லுக்கு மாறாமல் நடக்க வேண்டும் எனத் தந்தையால் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே, தங்கள் ஆணையின்படி நான் தாடகையைக் கொல்வேன்” என்று கூறுகிறான். (1.26:4) எனினும், தாடகை நேரில் வந்து எதிர்த்த போது, “பெண்ணாகையால் இவளைக் கொல்ல மனமில்லை; இவளுடைய பராக்ரமத்தை மட்டும் அழித்துவிடலாம் என நினைக்கிறேன்” என்று இலக்குவனிடம் கூறுகிறான். தாடகை போர்க்கோலம் கொண்டு, நாற்புறமும் கல்மாரி பொழிந்தவண்ணம் இராமனை எதிர்த்த போது, மீண்டும் விசுவாமித்திரர், “இராம, பெண்களைக் கொல்லுதல் அருவருக்கத்தக்கது என்னும் உன்னுடைய கருத்தை மாற்றிக்கொள். இவளுடைய மாயையின் சக்தி மிகுந்தது, சந்தியாகாலம் நெருங்குகிறது. எனவே, சீக்கிரம் இவளைக் கொல்” என்று ஆணையிடுகிறார். இராமன் உடனே ஓர் அம்பெய்து தாடகையை நிலத்தில் வீழ்த்துகிறான். (1.26:12,24,27) பௌத்த ஜைன ராமாயணங்கள் தாடகை வதம் பற்றிப் பேசவில்லை அடைக்கலப் படுத்தப்பெற்ற இராமலக்குவர்கள் விசுவாமித்திரனுடன் தாடகைவனம் அடைகிறார்கள். அவ்வனம் பாழ்பட்டுக் கிடத்தலைக் கண்டு அதன் வரலாறு அறிய விரும்பிய இராமனுக்கு, அகத்திய முனிவரால் சாபமுற்று அரக்கியாக மாறிய தாடகை மற்றும் அவளுடைய மக்கள் மாரீசன், சுபாகு ஆகியோரின் கொடுமையால் இவ்வனம் இவ்வாறாயிற்று என்றும் இலங்கையரசன் இராவணன் ஏவலால் இவள் எங்கள் தவத்திற்கு இடையூறு |