3. சாப வரலாறு கூறுமிடத்து, அகலிகை இந்திரனை அறிதலும் அறியாமையும். 4. சாப - விமோசன முறைகளில் வேறுபடல். அகலிகை வரலாறு கூறுவன / கூறாதன வான்மீகம், இரகுவம்சம், நரசிம்ம புராணம், கம்பராமாயணம், தெலுகு ராமாயணங்கள், கன்னட தொரவெ ராமாயணம், எழுத்தச்சன் ராமாயணம், துளசி ராமாயணம், தமிழ் நாட்டுப்புறப் பாடல் ஆகியன அகலிகை வரலாற்றை உரைக்கின்றன. தசரத ஜாதகம், விமல சூரியின் பௌமசரிதம், வாசுதேவஹிண்டி, குணபத்ரரின் உத்தரபுராணம், கன்னட பம்பராமாயணம் ஆகியன அகலிகை வரலாற்றை முற்றிலுமாக ஒதுக்கி விடுகின்றன. ஒழுக்கத்தின் இழிந்த வரலாறொன்றைக் கூறி அத்தகையவர்க்குக் குறிக்கோள் தலைவனாகத் தாங்கள் படைக்கும் இராமன் அருள்செய்வதாக வரும் நிகழ்ச்சியைப் பௌத்த, சமண சமயங்கள் விரும்பாமையே இதற்குக் காரணமாகலாம். மேலும் ஒழுக்கம் தவறித் திருந்திய ஆண்மக்களை இச் சமயக் காப்பியங்களில் காணலாமாயினும், அத்தகைய பெண்களை இவை படைத்துக்காட்ட முன்வருவதில்லை. இதற்கும் இச்சமயங்களின் தத்துவப் பார்வை காரணமாக அமைகிறது எனலாம். அகலிகை வரலாறு உரைக்கப் போந்த நூல்களிலும் துளசி ராமாயணமும், தமிழ் நாட்டுப்புறப் பாடலும் அகலிகை சாபம் பெற்றதை மட்டும் குறிப்பிடுகின்றன. அதற்கான காரணத்தைக் கூறாது விடுகின்றன. சாபத்திற்குக் காரணமான நிகழ்ச்சியைப் படைத்துக் காட்டுவதை இந்நூல்கள் விரும்பவில்லைபோலும். சாப விமோசனத்துக்கு முன் / பின் இனி அகலிகை வரலாற்றை, முழுமையாகவோ, பகுதியாகவோ உரைப்பதிலும்கூட வேறுபாடுகள் காணப்படுகின்றன. வான்மீகம், இரகுவம்சம், தெலுகு ராமாயணங்களில் ரங்கநாதம், பாஸ்கரம், கன்னட தொரவெ ராமாயணம், துளசி ராமாயணம் ஆகியன சாப விமோசனத்திற்கு முன்னரேயே அகலிகை வரலாற்றைக் கூறுகின்றன. கம்ப ராமாயணம், மொல்ல ராமாயணம், தமிழ் வில்லுப்பாட்டு ஆகியன சாப நீக்கத்திற்குப் பின்னர் அதிசயித்து நின்ற இராமனுக்கு அகலிகை வரலாற்றை எடுத்துக் கூறுகின்றன. இம்மாற்றத்தை முதன்முதலில் கம்பன்தான் செய்ததாகத் தோன்றுகிறது. நாடக நலனை மிகுவிக்கும் உத்தியாக அறிஞர் இதனைக் கருதுவர். இந்திரனை அறிதலும் அறியாமையும் அகலிகையின் அழகில் ஈடுபட்டுக் கௌதம முனிவரின் ஆசிரமத்துக்குள் அம்முனிவரின் வேடம் கொண்டு நுழைந்த இந் |